ஜார்கண்ட் மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் அரசு வெற்றி: விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்
ராஞ்சி: ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி மாதம் நிலமோசடியுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அம்மாநில உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால், கடந்த ஜூன் 28ம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, முதல்வராகப் பதவி வகித்து வந்த சம்பாய் சோரன், கடந்த சில நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார்.
கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு மீண்டும் மூன்றாவது முறையாக ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார். தொடர்ந்து, ஜார்கண்ட் சட்டப்பேரவையில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. ஜேஎம்எம் உள்பட கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்றனர். ஜார்கண்ட் சட்டப் பேரவையின் மொத்தமுள்ள 81 இடங்களில் ஜேஎம்எம் கட்சிக்கு 27 எம்எல்ஏக்கள், காங்கிரசுக்கு 17, ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 1, பாஜகவுக்கு 24 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
பெரும்பான்மை பலத்திற்கான 42 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஜேஎம்எம் கூட்டணிக்கு 45 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றிப் பெற்றது. தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான ஆலோசனை கூட்டம், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நடைபெற்றது. இன்று மாலை அமைச்சரவை பட்டியல் வெளியாகும் என்றும், அவர்களின் பதவியேற்பு நிகழ்வும் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.