உலகம் முழுவதும் எம்.பிக்கள் குழுவை அனுப்புனீர்கள்; எந்த நாடாவது பாக்.கை கண்டித்ததா?.. ராகுல் காந்தி கேள்வி
டெல்லி: இறந்த நிலையில் இந்திய பொருளாதாரம்; இது பிரதமர், நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் தெரியும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடன் இணைந்து வர்த்தகம் மேற்கொள்வதற்கு அபராதம் விதிக்கப்படும், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும். இந்தியாவுக்கான வரி விதிப்பு முறை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். டிரம்பின் இந்த அறிவிப்பு இந்திய தொழில் நிறுவனங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்பு குறித்து கவனத்தில் எடுத்துள்ளதாகவும், இந்த வரிவிதிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருவதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; இறந்த நிலையில் இந்திய பொருளாதாரம்; இது பிரதமர், நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் தெரியும். இந்திய பொருளாதாரம் உயிரற்ற பொருளாதாரம் என்பது அனைவருக்கும் தெரியும். பாஜக அரசு பொருளாதாரத்தை சீரழித்துள்ளது; வெளியுறவு கொள்கையை கீழ் நிலைக்கு கொண்டு சென்றது. கவுதம் அதானிக்கு ஏற்ப உதவி செய்து இந்திய பொருளாதாரம் சீரழிக்கப்படுகிறது.
அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும். ஆனால், அதை அமெரிக்க அதிபர்தான் வரையறுப்பார். அவர் சொல்வதை பிரதமர் மோடி செய்வார். இந்திய வெளியுறவுக் கொள்கை மிகவும் உன்னதமானது என வெளியறவுத்துறை அமைச்சர் பேசுகிறார். ஒருபுறம், அமெரிக்கா உங்களை துஷ்பிரயோகம் செய்கிறது. மறுபுறம், சீனாவும் அதையே பின்தொடர்கிறது. உலகம் முழுவதும் எம்.பிக்கள் குழுவை அனுப்புனீர்கள்; எந்த நாடாவது பாக்.கை கண்டித்ததா? இந்தியாவை எப்படி நடத்திச் செல்வது என்று ஆளும் பாஜக அரசுக்கு தெரியவில்லை என்று கூறினார்