கோவா, ஹரியானா, லடாக்கிற்கு புதிய ஆளுநர்கள் நியமனம் :தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கும் ஒன்றிய அரசு!!
டெல்லி : கோவா, ஹரியானா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவரும் ஒன்றிய முன்னாள் அமைச்சருமான அசோக் கஜபதி ராஜு, கோவா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2014 - 2018 பாஜக அரசில் விமானப் போக்குவரத்து அமைச்சராக அசோக் கஜபதி ராஜு பொறுப்பு வகித்தார். ஹரியானா ஆளுநராக அசிம் குமார் கோஷ் மற்றும் லடாக் துணை நிலை ஆளுநராக கவிந்தர் குப்தா ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இரண்டு முக்கிய தலைவர்கள் மத்திய அரசாங்கத்தில் அமைச்சர்களாகப் பொறுப்பு வகிக்கின்றனர். இந்நிலையில் மற்றொரு மூத்த தலைவருக்கு மத்திய அரசு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.பி. கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு தற்போது மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ளார். இக்கட்சியை சேர்ந்த மற்றொரு எம்பி டாக்டர். சந்திர சேகர் பெம்மசானி தற்போது மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் தொலைத்தொடர்புத் துறை இணை அமைச்சராக உள்ளார்.