கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் ஆடி திருவாதிரை விழா கோலாகலம்; ராஜேந்திர சோழன் நாணயம் பிரதமர் மோடி வெளியிட்டார்: கங்கை நீரால் அபிஷேகம் செய்து சிறப்பு தரிசனம்!
அரியலூர்: பிரதமர் மோடி இன்று அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் நடந்த ஆடி திருவாதிரை விழாவில் கலந்து கொண்டு ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்டார். மேலும் இளையராஜாவின் இசை கச்சேரியை கண்டு களித்த அவர் இரு இடங்களில் ரோடு ஷோ சென்றார். பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார். மாலத்தீவில் இருந்து ராணுவ விமானம் மூலம் நேற்று இரவு தூத்துக்குடி வந்த பிரதமர் மோடி, வாகைகுளம் பகுதியில் ரூ.452 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்ததுடன், ரூ.4.900 கோடி திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் இரவு 10 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்கிய பிரதமர் மோடி இன்று காலை சுமார் அரை மணி நேரம் ஓட்டலில் யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
பின்னர் கார் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றார். செல்லும் வழியில் பிரதமர் மோடி ரோடு-ஷோ நடத்தினார். நீதிமன்றம் அருகில் இருந்து தலைமை தபால் நிலையம் வரை ரோடு ஷோ நடந்தது.
இதையடுத்து, திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு பொன்னேரியில் இறங்கிய மோடி, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு ரோடு ஷோ மூலம் மக்களை சந்தித்தபடி சென்றார்.
அங்கு முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோயிலுக்கு பிரதமர் மோடி வந்தார். கோயிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் வாரணாசியில் இருந்து கொண்டுவரப்பட்ட கங்கை நீரை கொண்டு பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். பின்னர், கோயிலில் அமர்ந்து தியானம் செய்தார். மேலும், கோயில் சிற்பங்களையும், தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.
பின்னர், கோயில் வளாகத்தில் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம், கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டுமான தொடக்கம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கடல்சார் பயணத்தின் 1000 ஆண்டுகள் நினைவை கொண்டாடும் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். விழா மேடைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு சைவ சித்தாந்த மடங்களைச் சேர்ந்த 36 ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் வாழ்த்து தெரிவித்தனர். மாணவர்களின் திருவாசக பாராயணம் நடந்தது. தேவாரப்பாடலை 40 ஓதுவார்கள் பிரதமர் முன்னிலையில் பாடினர். இதையடுத்து ஆதீனங்களின் சிந்தாந்தம் பற்றிய சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த இசையை சுமார் 15 நிமிடங்கள் பிரதமர் கேட்டு ரசித்தார்.
அப்போது, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தையும், திருவாசகம் உரைநடை நூலையும் பிரதமர் மோடி வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் பேசினர். இதில் தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எஸ்.எஸ்.சிவசங்கர், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், மதியம் 1.45 மணியளவில் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி 2.30 மணியளவில் திருச்சி வந்தார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருச்சி, கங்கைகொண்ட சோழபுரத்தில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மோடி கங்கை நீர் கொண்டு வந்தது ஏன்?;
ராஜேந்திர சோழன் வட இந்தியாவுக்கு படையெடுத்து சென்று கங்கை நதி வரை வெற்றிக் கொடி நாட்டினான். கங்கை வெற்றிக்குப் பிறகு, கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய நகரத்தை உருவாக்கி, அங்கே பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டினான். கங்கை நீரைக் கொண்டு வந்து, அந்த நீரால் கோயிலில் உள்ள பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ததாக வரலாறு கூறுகிறது. கங்கை நீரால் அபிஷேகம் செய்தது, ராஜேந்திர சோழனின் வீரத்தையும், பக்தியையும் பறைசாற்றும் நிகழ்வாக கருதப்படுகிறது. அந்த வரலாற்று நிகழ்வை நினைவு கூரும் வகையில், பிரதமர் மோடி இன்று கங்கை நீரை எடுத்து வந்து பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ததாக கூறப்படுகிறது.
முதல் பிரதமர்: பிரகதீஸ்வரர் கோயிலுக்கு வந்த முதல் பிரதமர் மோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.