போலி திருக்குறள் விவகாரத்தில் ஆளுநருக்கு சம்பந்தம் இல்லை: கோவை மருத்துவர் வி.ஜி.மோகன் பிரசாத் விளக்கம்
கோவை: போலி திருக்குறள் விவகாரத்தில் ஆளுநருக்கு சம்பந்தம் இல்லை என நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கோவை மருத்துவர் வி.ஜி.மோகன் பிரசாத் விளக்கம் அளித்தார். மருத்துவ தினத்தையொட்டி, கிண்டிஆளுநர் மாளிகையில் மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா கடந்த 13ம்தேதி நடந்தது. தமிழகத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் 50 மருத்துவர்கள் கவுரவிக்கப்பட்டு ஆளுநர்ரவி நினைவு பரிசு வழங்கினார். இந்த கேடயத்தில் திருக்குறள் ஒன்று அச்சிடப்பட்டிருந்தது. அந்த திருக்குறளின் வரிசை எண் 944 என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த திருக்குறள்தான் மிகப் பெரிய பேசுபொருளாகி உள்ளது.
திருக்குறளில் அப்படி ஒரு குறளே கிடையாது என்பது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே ஆளுநர் அளித்த விருதில் போலி திருக்குறள் இடம்பெற்றதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்தது. போலி திருக்குறள் இடம்பெற்றது மன்னிக்க முடியாத தரம் தாழ்ந்த செயல் என ப.சிதம்பரம் கண்டித்திருந்தார். கடும் கண்டனம் எழுந்ததை அடுத்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கோவை மருத்துவர் மோகன் பிரசாத் விளக்கம் அளித்தார். போலி திருக்குறள் விவகாரத்தில் ஆளுநருக்கு சம்பந்தம் இல்லை
தவறுக்கு பொறுப்பேற்றுள்ள மருத்துவர் மோகன் பிரசாத், போலி திருக்குறள் எப்படி வந்தது என கூறவில்லை. ஆளுநருக்கும் ஆளுநர் மாளிகைக்கும் தொடர்பில்லை என்று மட்டுமே மருத்துவர் மோகன் பிரசாத் விளக்கம் அளித்தார். போலி திருக்குறளை உருவாக்கியது யார் என்ற விளக்கம் எதையும் மோகன்பிரசாத் கூறவில்லை. போலி திருக்குறளை எழுதியது யார் என தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.