Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரூ.16 ஆயிரம் கோடியில் தமிழகத்தில் முதல் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை: தூத்துக்குடியில் நாளை முதல்வர் துவக்கி வைக்கிறார்

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் ரூ.16 ஆயிரம் கோடியில் முதல் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலையை முதல்வர் நாளை (4ம் தேதி) துவக்கி வைக்கிறார். முதல்வரின் வருகையையொட்டி தூத்துக்குடி மாநகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை விமானத்தில் தூத்துக்குடி வருகிறார். உலகின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து கார் உற்பத்திக்கான ஆலை அமைப்பதற்கு தூத்துக்குடி - மதுரை புறவழிச்சாலையில் சில்லாதத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து சென்னையில் வின்பாஸ்ட் கார் கண்காட்சி நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில்முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 2 பணிமனைகள், 2 கிடங்குகள் கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. மின்சார கார் உற்பத்தி ஆலையில் வி.எப்-6, வி.எப்-7 வகை கார்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இங்கு ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை தமிழ்நாட்டில் முதல் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை என்பது குறிப்பிடத்தக்கது.

கார் தொழிற்சாலையை ெதாடங்கி வைக்க நாளை காலை 9 மணி அளவில் சென்னையிலிருந்து விமானத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்று, தூத்துக்குடி-மதுரை புறவழிச்சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து அங்கு நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள மாணிக்கம் மஹாலில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பங்கேற்கிறார். மேலும் பல்வேறு தொழில் முதலீடுகள் தொடர்பாக முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.

பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் சென்று, அங்கிருந்து சென்னை திரும்புகிறார். நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, கனிமொழி எம்பி., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டிஆர்பி ராஜா, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி கமிஷனர் பானோத் முருகேந்தர்லால், எம்எல்ஏக்கள் ஓட்டப்பிடாரம் சண்முகையா, விளாத்திகுளம் மார்க்கண்டேயன், வைகுண்டம் ஊர்வசி அமிர்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். முதல்வர் வருகையையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.