Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கல்வி, மருத்துவ சிகிச்சைக்காக திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பாக 15 பேருக்கு நிதியுதவி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கல்வி, மருத்துவ சிகிச்சைக்காக திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பாக 15 பேருக்கு நிதியுதவியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். திமுக இளைஞர் அணிச் செயலாளராக தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து, இளைஞர் அணி அறக்கட்டளைக்கு திமுகவினரும், திமுக நிர்வாகிகள் பலரும் நன்கொடை வழங்கி வருகின்றனர். இவ்வாறு வழங்கப்பட்ட நிதி வங்கியில் நிரந்தர வைப்பு தொகையாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

அதன்மூலம் கிடைக்கும் வட்டித்தொகையை திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் ஏழை- எளிய மக்களின் கல்வி- மருத்துவ சிகிச்சைக்காக மாதந்தோறும் நன்கொடையாக வழங்கி வருகிறது இளைஞர் அணி. அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, 2025 ஜனவரி மாதத்திற்கான பயனாளிகள் 15 பேருக்கு, திமுக இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.

இதில் கிர்கிஸ்தான் நாட்டிற்கு மருத்துவம் படிக்கச் சென்ற தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி, பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மருத்துவம் படிக்கச் சென்ற ஸ்ரீநிதா மற்றும் ஸ்ரீநிஜா, கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் பிரஜேஷ் உள்ளிட்ட 10 பேருக்கு கல்விச் செலவுகளுக்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த க.பாஸ்கர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திரஜித் ஆதவன், பொள்ளாச்சியைச் சேர்ந்த ஹர்சிக் உள்ளிட்ட 6 பேருக்கு மருத்துவ சிகிச்சைக்கான உதவித்தொகைகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், திமுக இளைஞர் அணியின் மாநில துணைச் செயலாளர்கள் ஜோயல், இன்பா ரகு, ஜி.பி.ராஜா, சீனிவாசன், பிரபு கஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, மாவட்ட அமைப்பாளர்கள் தங்கராஜ், சபரி கார்த்திக்கேயன், ஹக்கீம், சிவகுரு, வெங்கடேஸ்வரன், லோகேஷ், சுரேஷ் குமார், பாலாஜி, முகில் வேந்தன், ஜெயக்குமார் துணை அமைப்பாளர்கள் கோவை பாபு, உதய பூபதி, தனசேகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.