டெல்லி மெட்ரோ ரயிலில் காங். வேட்பாளருடன் ராகுல் காந்தி பயணம்.. முக்கிய பிரச்சனையான போக்குவரத்து நெரிசல் குறித்து கலந்துரையாடல்..!!
டெல்லி: டெல்லி மெட்ரோ ரயிலில் காங்கிரஸ் வேட்பாளர் கண்ணையா குமாருடன் பயணம் செய்த ராகுல் காந்தி பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். வடகிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கண்ணையா குமார் போட்டியிடுகிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு இடையே கண்ணையா குமாருடன் இணைந்து சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
அப்போது பயணிகளின் குறைகளை ராகுல் கேட்டறிந்தார். டெல்லியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறித்து கண்ணையா குமாருடன் கலந்துரையாடிய அவர், எம்.பி.யான பின்பு என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த கண்ணையா குமார் உழைக்கும் மக்களின் பிரச்சனைகளின் ஒன்றான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பேன் என்றார்.
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட டெல்லி மெட்ரோ ரயில் திட்டம் பொது போக்குவரத்தை எளிதாக்கி இருப்பதாக கூறும் காங்கிரஸ் ராகுலின் மெட்ரோ ரயில் பயண வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. மெட்ரோ ரயில் பயணத்தை தொடர்ந்து டெல்லியில் உள்ள ஆந்திரா பவன் உணவகம் ஒன்றிற்கு ராகுல் காந்தி சென்றார். கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்து உணவருந்திய அவர் பின்னர் அங்கிருந்து கிளம்பினார். அப்போது பலரும் ராகுல் காந்தியுடன் செல்பி எடுத்து கொண்டனர்.