Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காங்கிரஸ் மேலிடம் மீது பகிரங்க குற்றச்சாட்டு; எனது முதல்வர் பதவியை தட்டிப் பறித்தார்கள்: 25 ஆண்டு கால ஆதங்கத்தை கொட்டிய கார்கே

விஜயபுரா: எனது முதல்வர் பதவியை தட்டிப் பறித்தார்கள் என்று தனது 25 ஆண்டு கால ஆதங்கத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விஜயபுராவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1999ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி 132 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.

அப்போது, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த தற்ேபாதைய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவர ஐந்து ஆண்டுகள் கடுமையாக உழைத்தார். ஆனால், தேர்தலுக்கு வெறும் நான்கு மாதங்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா, கர்நாடகாவின் 16வது முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்வால் தனது முதலமைச்சர் கனவு பறிபோனதாக கார்கே கருதினார். பின்னர், எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் அவருக்குப் பின் வந்த காங்கிரஸ் முதலமைச்சர்களின் அமைச்சரவையில் மல்லிகார்ஜுன கார்கே அமைச்சராகப் பணியாற்றினார்.

இந்நிலையில் விஜயபுராவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நேர்ந்த அநீதி குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவர் பேசுகையில், ‘கர்நாடகாவில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராகி, கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவர நான் கடுமையாக உழைத்தேன். ஆனால், அப்போது கட்சிக்கு வந்து வெறும் 4 மாதங்களே ஆன எஸ்.எம்.கிருஷ்ணா முதலமைச்சராக்கப்பட்டார். அப்போது எனது 5 ஆண்டு கால உழைப்பு வீணானது போல் உணர்ந்தேன்.

இதுபோல பல சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அனைத்தையும் ஒரே நேரத்தில் பேசுவது சரியாக இருக்காது’ என்று குறிப்பிட்டார். கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற மல்லிகார்ஜுன கார்கே, ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சரானார். பின்னர், ரயில்வே மற்றும் சமூக நீதித் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். கடந்த 2022ம் ஆண்டில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியின் போது, காங்கிரஸ் மூத்த தலைவரான திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூரை தோற்கடித்து, காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். இதன் மூலம், சுமார் 24 ஆண்டுகளில் சோனியா காந்தி குடும்பத்தைச் சேராத முதல் காங்கிரஸ் தலைவர் என்ற பெருமையை கார்கே பெற்றார்.

இவரது தலைமையின் கீழ், 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களை வென்றது. இருப்பினும், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், அரியானா மற்றும் மகாராஷ்டிரா போன்ற முக்கிய மாநில சட்டமன்றத் தேர்தல்களில் கட்சி தோல்வியைச் சந்தித்தது. இந்த நிலையில் தற்போது தனது 25 ஆண்டு கால ஆதங்கத்தையும், கட்சியின் மேலிடம் எடுக்கும் முடிவால் தான் நேரடியாக பாதிக்கப்பட்டதையும் பொதுவெளியில் கார்கே பேசியது தேசிய அளவில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

மோடிக்கு தான் தெரியும்!

குடியரசு துணை தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தது தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இவரது ராஜினாமாவுக்கான காரணங்கள் மர்மமாகவே உள்ளன. இந்நிலையில் கர்நாடகாவின் விஜயபுராவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவுக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து, எனக்கு எந்த தகவலும் இல்லை. அவரது ராஜினாமா விசயம், அவருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான தனிப்பட்ட விஷயம்; என்ன நடந்தது என்பதை ஜெகதீப் தன்கர்தான் விளக்க வேண்டும். அவர் மாநிலங்களவை தலைவராக செயல்பட்ட போது, விவசாயிகள், ஏழைகள், பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள், மத மோதல்கள் போன்ற முக்கியப் பிரச்னைகளை மாநிலங்களவையில் எழுப்ப முயன்றபோது, ஜெகதீப் தன்கர் எங்களை பேசுவதற்கு வாய்ப்பளிக்கவில்லை. அவர் ஒன்றிய அரசின் பக்கமே இருந்தார்’ என்றார்.

கர்நாடகாவில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராகி, கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவர நான் கடுமையாக உழைத்தேன். ஆனால், அப்போது கட்சிக்கு வந்து வெறும் 4 மாதங்களே ஆன எஸ்.எம்.கிருஷ்ணா முதலமைச்சர் ஆக்கப்பட்டார்.