தாம்பரத்தில் இருந்து ரயிலில் சிதம்பரம் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: திமுகவினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
சென்னை: தாம்பரத்தில் இருந்து ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரம் புறப்பட்டார். தமிழகம் முழுவதும் மக்களின் குறைகளை தீர்க்க ஜூலை 15ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 10,000 இடங்களில் 15 அரசு துறைகளுடன் இணைந்து, பொதுமக்களுக்கு 46 சேவைகள் வழங்குவதுடன் கலைஞர் உரிமை தொகைக்கான முகாமும் நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அரசு அலுவலர்கள் பொதுமக்களின் வீட்டிற்கே சென்று மனுக்களை பெறும் இந்த திட்டத்ைத அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (15ம் தேதி) தொடங்கி வைக்கிறார். இதற்காக தாம்பரத்தில் இருந்து ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதம்பரம் புறப்பட்டார். தாம்பரம் ரயில் நிலையத்தில் முதல்வருக்கு திமுகவினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிதம்பரத்துக்கு இரவு 9.30 மணிக்கு வருகிறார். கீழ வீதியில் உள்ள தனியார் மஹாலில் தங்குகிறார். தொடர்ந்து நாளை (15ம் தேதி) காலை சிதம்பரம் காலை 9 மணியளவில் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இதைதொடர்ந்து ஜிஎம் வாண்டையார் திருமண மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை தொடங்கி வைத்து பேசுகிறார். பின்னர் அண்ணாகுளம் அருகில் அம்பேத்கர் சிலையை திறந்து வைக்கிறார். லால்புரம் புறவழி சாலையில் ரூ.6 கோடியே 39 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இளைய பெருமாள் நூற்றாண்டு அரங்கையும் திறந்து வைக்கிறார். பின்னர் பிரம்மராயர் கோயில் அருகே நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பின்னர் 11.30 மணி அளவில் அரசு விழாவில் கலந்து கொள்ள மயிலாடுதுறை செல்கிறார்.