Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அப்போலோ மருத்துவமனையில் இருந்தபடியே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

சென்னை : அப்போலோ மருத்துவமனையில் இருந்தபடியே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகள் குறித்து தலைமைச் செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார். மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது எந்த தொய்வுமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் மூன்று நாட்கள் ஓய்வு மற்றும் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.மருத்துவமனையில் இருந்தபடியே அவர் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் இன்று (22.7.2025) அவர் அரசு தலைமைச் செயலாளர் திரு.நா.முருகானந்தம், இ.ஆ.ப., அவர்களுடன் அரசுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

கடந்த 15.7 2025 தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வரும் “உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் பணிகளின் முன்னேற்றம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டு அறிந்தார். நேற்றைய தேதி வரை இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 5,74,614 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இதில் எத்தனை மனுக்களுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன. பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் உரிய துறைகள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனவா போன்ற விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர் அவர்கள். தொடர்ந்து இந்த முகாம்கள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி நடத்தப்பட வேண்டும் என்றும். முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் குறித்தும் அறிவுரை வழங்கினார்.மேலும் பெறப்படும் மனுக்களின் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் எவ்வித தொய்வுமின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.