Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள்: துணை முதலமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்.பி., அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்களவை எம்.பி. கனிமொழி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர் கூறிய வாழ்த்து செய்தியில்;

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து:

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியர் வழியில், கழகத்தை வழிநடத்தும் கழகத்தலைவர், தமிழ்நாட்டு மக்களின் பேரன்பைப் பெற்று, திராவிட மாடல் நல்லாட்சி நடத்துவதுடன் மொழியுரிமை, மாநில உரிமைகளை வலியுறுத்தி, இன்று இந்தியாவே நேசிக்கும் மகத்தான தலைவராய் மிளிரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

`இளைஞர் அணிதான் என் தாய்வீடு’ என்று பெருமிதம் பொங்கச் சொல்லும் கழகத்தலைவர் அவர்கள் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து எங்களை வழிநடத்த வேண்டுமென வாழ்த்துகிறோம்.

மக்கள்நலன் போற்றும் திராவிட மாடல் ஆட்சி 2026-இல் மீண்டும் அமைந்து கழகத்தலைவர் அவர்கள் முதலமைச்சராகத் தொடர, இந்நன்னாளில் உறுதியேற்போம்!

தமிழ்நாடு போராடும்!

தமிழ்நாடு வெல்லும்!

மக்களவை எம்.பி. கனிமொழி வாழ்த்து:

தென்னகத்தின் உரிமைக்குரலாய் - தமிழ்நாட்டின் சுயமரியாதைச் சுடராய் - தமிழ் நிலத்தின் தகத்தகாய சூரியனாய் - தமிழ் மக்களின் தன்னிகரற்ற தலைவராய் விளங்கி வரும் திராவிட மாடல் முதல்வர் - கழகத் தலைவர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாளில் எனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது தலைமையில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கச் சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுக்க உறுதியேற்போம்.

அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது பிறந்தநாளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையைத் தொடங்கிவைத்து சிறப்பித்தார்.

அமைச்சர் பெருமக்களும், இலட்சக்கணக்கான தொண்டர்களும், மக்களும் வாழ்த்துகள் தெரிவிக்க காத்துக்கொண்டிருக்கையில், நேராக அரசுப் பள்ளிக்கு வருகை புரிந்த முதலமைச்சர் அவர்கள் தனது பிறந்தநாளை மாணவர்களிடம் இருந்து தொடங்கினார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அமைந்துள்ள லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் அவர்கள் தொடங்கிவைத்து சிறப்பித்தார்.

மாணவர்கள், ஆசிரியப் பெருமக்களோடு இணைந்து முதலமைச்சர் அவர்களை வாழ்த்தி வணங்கினோம்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.