Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிபிஐ-யை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி மேற்குவங்க அரசு தொடர்ந்த வழக்கு செல்லும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: சிபிஐ-யை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக மேற்குவங்க அரசு தொடர்ந்த வழக்கு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது. அரசியல் சாசன பிரிவு 131ன் கீழ் ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேற்குவங்க அரசு தாக்கல் செய்த மனுவில், ‘மேற்குவங்க மாநிலஎல்லைக்குள் ஒன்றிய அரசின் சிபிஐ விசாரணை அமைப்பு விசாரணை மேற்கொள்வதற்கான அனுமதியை திரும்பப் பெற்ற பின்னரும், சிபிஐ தன்னிச்சையாக வழக்குப் பதிவு செய்து விசாரணைகள் நடத்தி வருகிறது. சட்டத்திற்கு புறம்பான இதுபோன்ற செயல்பாடுகளை ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் சிபிஐ அமைப்பு எடுத்து வருகிறது’ என்று கூறப்பட்டது.

இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ஒன்றிய அரசு தரப்பில், ‘உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்புகளில் அரசியல் சாசனத்தின் பிரிவு 131ம் ஒன்றாகும். அதனை தவறாகப் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. மேற்குவங்க மாநில அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ள வழக்குகள், ஒன்றிய அரசால் பதிவு செய்யப்படவில்லை. சிபிஐ தான் வழக்குப்பதிவு செய்துள்ளது. சிபிஐ என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது மேற்குவங்க அரசின் தரப்பில், ‘அரசியல் சாசனத்தின் பிரிவு 131 என்பது ஒன்றிய அரசுக்கும், ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலத்துக்கும் இடையில் ஏற்படும் பிரச்னைகளை விசாரிப்பதற்கான உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பைப் பற்றி கூறுகிறது. ஆனால் ஒன்றிய அரசின் விசாரணை அமைப்பான சிபிஐ, மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதற்கும், சோதனைகள் மேற்கொள்வதற்கும் வழங்கப்பட்டிருந்த பொது அனுமதியை கெடுக்கும் விதமாக சிபிஐயின் நடவடிக்கை உள்ளது. அதனை அடிப்படையாக கொண்டு தான் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி எங்கள் மாநில அரசு திரும்பப்பெற்றது’ என்று தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் இன்று வழங்கிய தீர்ப்பில், ‘ஒன்றிய அரசுக்கு எதிராக மேற்குவங்க அரசு தொடர்ந்த வழக்குகள் தகுதியின் அடிப்படையிலும், சட்டத்தின் படியும் தொடரும். மேலும் ஒன்றிய அரசுக்கு எதிராக மேற்குவங்க மாநில அரசு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது’ என்றனர். அப்போது ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் ஆகஸ்ட் 13ம் தேதிக்குள் ஒரு சட்ட கட்டமைப்பை உருவாக்குவோம்’ என்றார். இதையடுத்து ஒன்றிய அரசுக்கு எதிராக மேற்குவங்க அரசு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.