Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காவிரி நீரை பெற உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு: கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை பெற உச்ச நீதின்றத்தை நாட அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை அனைத்து கட்சிகளின் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் தொடங்கியது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அப்போது பேசிய அவர்; காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையினையும், மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினையும் பின்பற்ற மறுத்து, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையின்படி நமக்குக் கிடைக்க வேண்டிய குறைந்த அளவு தண்ணீரைக் கூட கர்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது.

இதனை முறியடித்து, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி பல ஆக்கபூர்வமான கருத்துக்களை இங்கு நீங்கள் தெரிவித்து இருக்கின்றீர்கள். அதற்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ்நாட்டுக்கு சட்டபூர்வமாக உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கிடைக்க வேண்டிய நீரினைச் சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தை நாடித் தான் நீரைப் பெற்றோம். இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கக்கூடிய சூழ்நிலையிலும், கர்நாடகா அரசு இவ்வாறு நடந்து கொள்வதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில், ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுகளை நான் தீர்மானங்களாக இப்பொழுது படிக்கின்றேன்:

தீர்மானங்கள்

* காவிரி நடுவர் மன்றம் 05-02-2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், மாண்பமை உச்சநீதிமன்றம் 16-02-2018 அன்று அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசிற்கு இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

* காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் மாண்பமை உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திட கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினை இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.

* காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் மாண்பமை உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாடு பெறவேண்டிய நீரை உடனடியாகப் பெறுவதற்கு, தேவைப்படின், மாண்பமை உச்சநீதிமன்றத்தை நாடி, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இக்கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.

இந்தத் தீர்மானங்களின் அடிப்படையில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமூச்சோடு மேற்கொண்டு, காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை இந்த அரசு நிலைநாட்டும் என்று உறுதியளித்தார்.