Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காவிரி கரையோரம் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்

தஞ்சாவூர்: காவிரி கரையோரம் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. காவிரி ஆற்றின் கரையோரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆடி மாதத்தில் 18-வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா ஆடிப்பெருக்காகும். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து காவிரி ஆறுகளில் புது வெள்ளம் பொங்கி வரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். தற்போது நெல், கரும்பு ஆகியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும்.

அதற்கு வற்றாத நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் வந்தது. ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் ஆற்றில் புனிதநீராடி கரையோரம் சுத்தம் செய்வார்கள். பின்னர் அங்கு பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து அகல்விளக்கு ஏற்றி வழிபாடு நடத்துவர்.

இதில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தி வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். அது மட்டுமின்றி தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்களை செய்து ஆற்றங்கரையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா அனைத்து தரப்பினராலும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் கைகளில் மங்களப் பொருள்களை பாத்திரங்களில் எடுத்து வந்து காவிரி ஆற்றின் படித்துறையில் தலைவாழை இலையை விரித்து அதில் பழங்கள், பலகாரங்கள், காப்பரிசி, காதோலை கருகமணி, மஞ்சளில் தோய்த்தநூல் , அருகம்புல் ஆகியவற்றை படைத்து வழிபட்டனர். சாம்பிராணி தூபம் காண்பித்து சூடம் ஏற்றி காவிரி அன்னையை வழிபட்டு அனைவருக்கும் காண்பித்தனர்.

காவிரி அன்னையை வணங்கி எப்போதும் பெருகிவந்து நாட்டை வளப்படுத்த வேண்டும் என்று உருக்கமாக பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து மூத்த சுமங்கலி பெண்கள் முதலில் மற்றவர்களுக்கு மஞ்சள் கயிறு கழுத்தில் கட்டினர், அதனை தொடர்ந்து அனைத்து பெண்களுக்கும் மஞ்சள் கயிறு கட்டி விட்டனர். ஆண்களுக்கு தங்கள் கைகளில் கட்டினார்கள். புதுமண தம்பதியர் புத்தாடை உடுத்தி காவிரி அன்னையை வணங்கி ஆடிப்பெருக்கை கொண்டாடினார்கள்.