Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நடப்பாண்டில் முறைகேடுகளுடன் நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை அறிக்கை

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 3 லட்சத்து 41 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். இதில் கடந்த 2017 முதல் 2020 வரை, மூன்றாண்டுகளில் திணிக்கப்பட்ட நீட் தேர்வின் மூலம் 13 மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரிகளில் சேருகிற கொடுமை நிகழ்ந்தது. உள்ஒதுக்கீடு 7.5 சதவிகிதம் வந்த பிறகு மொத்தமுள்ள 5567 இடங்களில் 435 மாணவர்களுக்குத் தான் மருத்துவ படிப்பில் சேருகிற வாய்ப்பு கிடைத்தது.

மாநில பாடத் திட்டத்தில் படித்து, அதிக மதிப்பெண்கள் பெற்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் நீதி கிடைக்காத நிலையில் தற்கொலை செய்து கொண்ட அனிதா உள்ளிட்ட 16 மாணவர்கள் பலியானதற்கு பிறகு தான் தமிழகமே ஒட்டுமொத்தமாக நீட் தேர்வை எதிர்த்தது.

இந்நிலையில், ஒன்றிய பா.ஜ.க. அரசு நடத்தும் நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் முதல் மதிப்பெண்ணான 720-ஐ 67 மாணவர்கள் பெற்றிருப்பதும், தேர்வு மையங்களில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகளும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக அகில இந்திய தரத்தில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் அரியானாவை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் வரிசை எண்கள் ஒரே மாதிரி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த ராஜஸ்தானில் இருந்து மட்டும் 11 பேர் முதலிடம் பெற்றிருப்பதும் மாணவர்களிடையே சந்தேகத்தை உறுதிபடுத்தியுள்ளது.

இதனையடுத்து, ஒரே மையத்தில் இருந்து 720-க்கு 720 மதிப்பெண்கள் பெறுவது நீட் தேர்வு கேள்வித் தாள் கசிந்திருப்பதையே காட்டுகிறது என்று பலத்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வினாத் தாள் கசிவில் கடைசி நிமிட கருணை மதிப்பெண்கள் மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான நீட் முடிவுகளில் உள்ள தவறான தகவல்களின் காரணமாக மருத்துவ விண்ணப்பதாரர்களில் பெரும் பகுதியினர் நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீட் தேர்வு பல்வேறு குளறுபடிகளுக்கும், முறைகேடுகளுக்கும் வழிவகுக்கிற காரணத்தினால் தான் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கடுமையான போராட்டங்களை நடத்தி வருகிறது.

நீட் தேர்வு என்பது ஏழை,எளிய மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிற தேர்வாகவே உள்ளது. மாநில உரிமைகளை பறித்து நீட் தேர்வை திணித்து கூட்டாட்சி தத்துவத்திற்கு குழிதோண்டிய பா.ஜ.க. தான் இத்தகைய முறைகேடுகளுக்கும் பொறுப்பாகும். எனவே, முறைகேடுகளுடன் நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் உதித்ராஜ் போன்றவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பியிருக்கிறார்கள். சமூக நீதிக்கு எதிரான ஏழை, எளிய மாணவர்களுக்கு எட்டாக் கனியாக உள்ள நீட் தேர்வை ரத்து செய்கிற நடவடிக்கையின் மூலம் ஒழித்துக்கட்ட வேண்டுமென தமிழக முதலமைச்சர் எழுப்பியுள்ள கோரிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்