Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2027ல் புல்லட் ரயில் சேவை தொடங்கும்; அடுத்த 5 ஆண்டில் 1,000 புதிய ரயில்கள்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

டெல்லி: இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 புதிய ரயில்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் வரையில் புல்லட் ரயில் சேவையை தொடங்க மோடி தலைமையிலான பாஜ அரசு முடிவு செய்தது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா 2017ம் ஆண்டு நடந்தது. தற்போது தூண்கள் அமைக்கப்பட்டு காரிடர்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இவை முடிக்கப்பட்டு 2027ம் ஆண்டு புல்லட் ரயில் சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: உலகளவில் ரயில் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பது இந்திய ரயில்வேயின் முக்கிய நோக்கம்.

மேலும், உள்நாட்டில் செலவு குறைந்த சரக்கு போக்குவரத்துக்கு முதுகெலும்பாக மாற வேண்டும் என்பது நீண்டகால தொலைநோக்கு பார்வையில் ஒன்று. இதன் ஒரு பகுதியாக, அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 புதிய ரயில்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோல புல்லட் ரயில் திட்டத்தை 2027-ல் தொடங்கப்படும். ஒன்றியத்தில் பாஜ ஆட்சியில் இருந்த 11 ஆண்டுகளில் நாடு முழுவதும் கூடுதலாக 35,000 கிமீ தூரத்துக்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது ஜெர்மனி நாட்டின் ஒட்டுமொத்த ரயில் பாதைகளுக்கு சமமானது. ஆண்டுதோறும் 30 ஆயிரம் ரயில் வேகன்கள் மற்றும் 1,500 இன்ஜின்கள் தயாரிக்கப்படுகின்றன. ரயில்வே துறைக்கான முதலீடு ரூ.25 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது ரூ.2.52 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

நெடுஞ்சாலைகள் மூலம் சரக்குகளை எடுத்து செல்வதற்கு ஆகும் செலவில் 50 சதவீதம் மட்டுமே ரயில்வே துறை கட்டணமாக நிர்ணயிக்கிறது. பயணிகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும், சிறந்த பயண அனுபவத்தை ஏற்படுத்தவும் அம்ரித் பாரத், வந்தே பாரத் என்ற பெயர்களில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.