கும்பகோணம்: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அவர் பேசியது: வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரவில்லை. கொரோனா காலத்தில் உயரதிகாரிகளுடன் பேசி ஆல் பாஸ் என அனைத்து மாணவ, மாணவிகளையும் தேர்ச்சி பெற செய்தது அதிமுக அரசுதான்.
இதை மாணவர்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தோம். அதிமுக ஆட்சியில் தான் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இப்போது ஆசிரியர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி, பாஜவுடன் கூட்டணி வைத்து விட்டார். பாஜ விழுங்கி விடும் என்கின்றனர். எடப்பாடி பழனிசாமி என்ன புழுவா? மீன் தின்பதற்கு. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சி முடிந்த பின்னர் இரவு கும்பகோணத்தில் உள்ள ஓட்டலில் தங்கினார். அந்த ஓட்டலில் இன்று அவர் தொழிலதிபர்கள், விவசாயிகள், வணிகர்களை சந்தித்து பேசுகிறார். மாலை 5 மணிக்கு தஞ்சை செல்லும் எடப்பாடி ஆத்துபாலத்திலிருந்து ரயிலடி வரை ரோடு ஷோ நடத்துகிறார். பின்னர் திருவையாறு செல்லும் அவர் இரவு தஞ்சை வந்து தங்குகிறார். நாளை பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
எடப்பாடி உளறல்;
எடப்பாடி மேலும் பேசுகையில், நாடாளுமன்றத்தில் 39 எம்எல்ஏ இருக்கிறார்கள் என்று வாய் தவறி கூறினார். பின்னர் சுதாரித்து கொண்டு 39 எம்.பிக்கள் உள்ளனர். ஏன் ஒன்றிய அரசை கேள்வி கேட்கவில்லை என்றார்.