மக்களவை தேர்தலின் போது, பணப்பட்டுவாடா செய்ய நயினார் நாகேந்திரனுக்கு பாஜக நிர்வாகிகள் உதவியது உறுதி : சிபிசிஐடி தகவல்
சென்னை : தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக தேர்தலின் போது, பணப்பட்டுவாடா செய்ய நயினார் நாகேந்திரனுக்கு பாஜக நிர்வாகிகள் உதவியதாக சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் வேலை செய்யும் ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹவாலா தரகர் சூரஜ் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நயினார் நாகேந்திரனுக்கு மக்களவை தேர்தலின் போது, பணம் பட்டுவாடா செய்ய பாஜக நிர்வாகிகள் எஸ்.ஆர்.சேகர், கேசவ விநாயகம், கோவர்தன் ஆகியோர் உதவியது உறுதியானது என்றும் கோவர்தனின் ஓட்டுநர் விக்னேஷ் மூலமாக ஒன்றரை கிலோ தங்கத்திற்கு பதிலாக ரூ.97.92 லட்சம் பணத்தை கைமாற்ற ஹவாலா தரகர் சூரஜ் உதவியது கால் டேட்டா ரெக்கார்ட் மூலம் உறுதியாகியுள்ளது என்றும் சிபிசிஐடி தெரிவித்தது.