Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பில்கிஸ் பானு வழக்கு.. இருள் சூழந்த வேளையில் நம்பிக்கைத் தரும் ஒளிக்கீற்றாக உள்ளது உச்சநீதிமன்றத் தீர்ப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் 11 குற்றவாளிகளை முன் விடுதலை செய்த குஜராத் மாநில அரசின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், இரண்டு வாரத்தில் குற்றவாளிகள் அனைவரும் சிறையில் சரணடைய வேண்டும் என்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,"சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்திருப்பது, அரசியல் இலாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.

தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் உண்மைகளை மறைத்து, நீதிமன்றத்தையே தவறாக வழிநடத்தி கொடுங்குற்றவாளிகளை விடுவிக்க பிரயத்தனம் செய்யும் பா.ஜ.க. ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நீண்டகால சிறைவாசிகளை - நன்னடத்தையின் அடிப்படையிலும் வயது மூப்பு கருதியும் சட்டபூர்வமாக முன்விடுதலை செய்யும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது அவர்களது இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது.

“நீதி கிடைத்தது கண்டு கண்ணீர் மல்கினேன்; என் குழந்தைகளைக் கட்டி அணைத்துக் கொண்டேன்; ஒரு பெரிய மலையையே என் மேல் இருந்து அகற்றியது போன்ற உணர்வை பெறுகிறேன். இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன்” என்று சகோதரி பில்கிஸ் பானு அவர்கள் கூறியுள்ள வார்த்தைகள் அவர் பட்ட இன்னல்களை விவரிக்கின்றன.

நீதி கேட்டு அவர் நடத்திய நெடும்பயணத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி, பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கத்தையும் போராடும் மன உறுதியையும் தருவதாகும். அஞ்சாமலும் சலிப்பின்றியும் அவர் நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அவருக்கும் அவருக்கு துணையாக நின்ற மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் என் பாராட்டுகள்,'இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.