பீகார் தேர்தல் வெற்றிக்காக நிதிஷ்குமார் அரசு உலக வங்கி நிதியில் ரூ.14,000 கோடி முறைகேடு: பிரசாந்த் கிஷோர் கட்சி பகீர் குற்றச்சாட்டு
பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக, உலக வங்கியின் நிதியை நிதிஷ் குமார் அரசு முறைகேடாகப் பயன்படுத்தியதாக பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வென்றது. இந்த தேர்தலில் முதல் முறையாகக் களம் கண்ட முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அக்கட்சியின் தேசியத் தலைவர் உதய் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து, நிதிஷ் குமார் அரசு மக்கள் பணத்தில் இருந்து சுமார் ரூ.40,000 கோடியை மக்களின் வாக்குகளை வாங்குவதற்காக வாரி இறைத்துள்ளது. இந்த முறைகேட்டின் அளவு இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் நடந்துள்ளது. உலக வங்கியிடமிருந்து கடனாகப் பெற்ற ரூ.14,000 கோடியை இலவசங்களுக்காகவும், சலுகைகளுக்காகவும் மடைமாற்றியுள்ளனர். குறிப்பாக முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம் என்ற பெயரில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோதும், வாக்குப்பதிவு நடப்பதற்கு முந்தைய நாள் வரை கூட பெண்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.10,000 செலுத்தப்பட்டது.
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் ‘காட்டு தர்பார்’ மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே, எங்களுக்கு ஆதரவளித்த வாக்காளர்கள் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்தனர்’ என்றார். இதே குற்றச்சாட்டு குறித்து ஜன் சுராஜ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான பவன் வர்மா கூறுகையில், ‘பீகாரின் பொதுக்கடன் தற்போது ரூ.4,06,000 கோடியாக உள்ளது. கஜானா காலியாக இருக்கிறது. இந்த நிலையில், உலக வங்கியிடமிருந்து வேறு ஒரு திட்டத்திற்காகப் பெறப்பட்ட ரூ.21,000 கோடி நிதியிலிருந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, ரூ.14,000 கோடி எடுக்கப்பட்டு, மாநிலத்தில் உள்ள 1.25 கோடி பெண்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது ’ என்று குறிப்பிட்டார். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களோ அல்லது பீகார் அரசோ இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


