டெல்லி: பொதுத்துறை வங்கிகள் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.12 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கடன் தள்ளுபடிகள் குறித்து கூறியதாவது"பொதுத்துறை வங்கிகள் கடந்த 2015-16 முதல் 2024-25 வரையிலான 10 ஆண்டுகள் ரூ.12 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பொதுத்துறை வங்கிகள் ரூ.5.82 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் பாரத ஸ்டேட் வங்கி ரூ.1.14 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. எஸ்.பி.ஐ.க்கு அடுத்தபடியாக யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.85, 540 கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த 5 ஆண்டுகளில் ரூ.8, 1243 கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. அதே போல் கனரா வங்கி ரூ.56, 491 கோடியும், பேங் ஆப் பரோடா ரூ.70,061 கோடி கடன்களையும் கடந்த 5 ஆண்டுகளில் தள்ளுபடி செய்துள்ளன.மேலும் பொதுத்துறை வங்கிகள் 1,600க்கும் மேற்பட்ட பெருநிறுவனக் கடன் வாங்குபவர்களை கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களாக வகைப்படுத்தியுள்ளன, அவர்கள் கிட்டத்தட்ட 1.63 லட்சம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளனர்."இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.