பெங்களூரு : பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு தொடர்பாக பாஜக பிரமுகர் சாய் பிரசாத் என்பவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஷிமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகரான சாய் பிரசாத்தை பிடித்து என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது. ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபருடன் பாஜக பிரமுகர் சாய் பிரசாத் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செல்போன் உரையாடல் மற்றும் அவருடன் நெருங்கி பழகியதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் என்ஐஏ அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். ஏற்கனவே ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது முசமில், தலைமறைவாக உள்ள 2 குற்றவாளிகளுடன் சாய் பிரசாத்துக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் ஷிமோகாவில் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் தங்கியிருந்த வீடு, 2 செல்போன் கடைகளில் என்ஐஏ சோதனை நடத்தியது. குண்டுவெடிப்பு தொடர்பாக செல்போன் கடை ஊழியர்கள் 2 பேரிடம் என்ஐஏ நடத்திய விசாரணையில் சாய் பிரசாத் குறித்து தகவல் கிடைத்துள்ளது. செல்போன் கடை ஊழியர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சாய் பிரசாத்தை பிடித்து என்ஐஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக பிரமுகரே என்ஐஏவிடம் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக பிரமுகர் சிக்கியிருப்பது கர்நாடக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மார்ச் 1-ந்தேதி பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.