Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழக வாரசந்தைகளில் ரூ.20 கோடிக்கு ஆடுகள் விற்பனை

சென்னை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு வாரச் சந்தையில் ரூ.20 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 150 ஆண்டுகளுக்கு மேலாக வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆடு, மாடுகள், அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

குறிப்பாக செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் வெள்ளாடுகள் மேய்ச்சலுக்காக மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை தழைகளை மேய்ந்து வளர்க்கப்படுவதால் இந்த வெள்ளாடுகளை வாங்குவதற்கு தேனி, கம்பம், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

இந்நிலையில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் ஏராளமான இஸ்லாமியர்கள் ஆடுகளை வாங்கி செல்வதற்காக இன்று காலையில் செஞ்சி வார சந்தைக்கு வந்திருந்தனர். இன்று அதிகாலை 3மணி முதலே விவசாயிகள் தங்களது வளர்ப்பாடுகளையும், வெளிமாவட்டத்திலிருந்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரிகளும் ஆடுகளை விற்பதற்காக கொண்டு வந்தனர்.

ஏராளமான வியாபாரிகள் அதை வாங்கிச் செல்வதற்காக வாகனங்களில் செஞ்சி வார சந்தைக்கு வந்திருந்தனர். சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். சுமார் ரூ.6 கோடிகள் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வேப்பூர் பகுதியில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை இயங்கி வருகிறது. இன்று நடந்த வாரச்சந்தையில் திருச்சி, சென்னை, தேனி, நாகை, கோவை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல மாவட்டத்தில் இருந்து பல்வேறு வகையான ஆடுகளை வாங்கி சென்றனர். இதில் ரூ. 6 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் வெள்ளிக்கிழமைதோறும் வாரச்சந்தை நடப்பது வழக்கம். இங்கு ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்தும் ஆடுகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் இன்று நடந்த வாரசந்தையில் சுமார் 4,000 ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இன்றைய சந்தையில் சுமார் ரூ.5 கோடிக்கு வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரிலும் வழக்கம்போல் இன்று ஆட்டுச்சந்தை நடந்தது. காலை 10 மணி நிலவரப்படி ரூ.30 லட்சத்திற்கு மேல் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று ஒரே நாளில் ரூ.2கோடிக்கு மேல் ஆடுகள் விற்கப்பட்டதாக வியாபாரிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் தெரிவித்தனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டியில் இஸ்லாமியர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். பள்ளப்பட்டியில் பக்ரீத் பண்டிகையையொட்டி 2 நாட்கள் ஆட்டு சந்தை நடைபெறும். இந்தாண்டு நேற்று மாலை ஆட்டுச்சந்தை தொடங்கியது. இங்கு திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

இதேபோல் விவசாயிகள் ஆடுகளை நேரடியாக சந்தைக்கு கொண்டு வந்து விற்றனர். சந்தை இன்றிரவு வரை நடைபெறும். ரூ.50லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தை களைகட்டியது. ஆடுகள் அவற்றின் எடை, தரத்துக்கேற்ப ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்பட்டன. இன்று நடைபெற்ற சந்தையில் சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்று தீர்ந்ததாக சந்தை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.