Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அவிநாசி ரிதன்யா தற்கொலை வழக்கில் கணவர் குடும்பத்தினர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி

திருப்பூர்: அவிநாசி ரிதன்யா தற்கொலை வழக்கில் கணவர் குடும்பத்தினர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை (53). பனியன் நிறுவன அதிபர். இவரது மனைவி ஜெயசுதா (42). இவர்களது ஒரே மகள் ரிதன்யா (27). எம்எஸ்சி பட்டதாரி. ரிதன்யாவுக்கும், இதே பகுதியில் உள்ள ஜெயம்கார்டனை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி- சித்ராதேவி தம்பதியின் மகன் கவின்குமாருக்கும் (27) கடந்த ஏப்ரல் 11ல் திருமணம் நடைபெற்றது. இவர் கார்மெண்ட்ஸ் டிரேடிங் கம்பெனி உரிமையாளர்.

திருமணத்தின்போது ரிதன்யாவிற்கு 300 பவுன் நகையும், மாப்பிள்ளைக்கு ரூ.70 லட்சத்திற்கு சொகுசு காரும் வாங்கி கொடுத்ததோடு, ரூ.2.25 கோடி செலவு செய்து திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி கோயிலுக்கு செல்வதாக காரில் புறப்பட்ட ரிதன்யா கைகாட்டிப்புதூரில் காருக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, தனது தந்தையின் வாட்ஸ் அப்பிற்கு கதறி அழுதபடி ஆடியோ பதிவை அனுப்பியிருந்தார். அதில், 500 பவுன் நகை வரதட்சணை கேட்டதாகவும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ரிதன்யாவை கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் தொடர்ந்து சித்ரவதை செய்ததாகவும் கூறியிருந்தார்.

மேலும், தற்கொலைக்கு காரணம் கணவர் கவின்குமார் அவரது பெற்றோர் ஈஸ்வரமூர்த்தி- சித்ராதேவி ஆகியோர் தான் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக, சேவூர் போலீசார் வழக்குப்பதிந்து ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை கைது செய்தனர். கணவர் குடும்பத்தினர் ஜாமீன் கேட்டு திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஜாமீன் வழங்கக் கூடாது என ரிதன்யா பெற்றோர் நீதிமன்றத்தில் இடையிட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று நீதிமன்றத்தில் இருதரப்பு வாதம் நடைபெற்ற நிலையில் கணவர் குடும்பத்தாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.