சென்னை: கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து(77) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மற்றும் பத்மாவதி தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் மு.க.முத்து. 1970ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் கதாநாயகனாக மு.க.முத்து அறிமுகமானார். பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், அணையா விளக்கு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நடிப்பு திறன் மட்டுமின்றி பல்வேறு படங்களில் தனது சொந்த குரல், சிறந்த பாடல்களையும் பாடியுள்ளார். தேவா இசையில் மாட்டுத்தாவணி என்கிற படத்தில் மு.க.முத்து கடைசியாக பாடல் பாடியிருந்தார்.
இந்நிலையில், இவர் கடந்த சில நாட்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த மு.க.முத்து(77) இன்று காலை 8 மணியளவில் காலமானார். இதையடுத்து அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மு.க.முத்துவின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மு.க.முத்துவின் மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.