Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய 3 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரணை: செம்பியம் போலீசார் முடிவு

பெரம்பூர்: தமிழக பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமான பொன்னை பாலு, அருள் மற்றும் திருமலை ஆகிய 3 பேரையும் மீண்டும் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் போலீசார் முடிவு செய்துள்ளனர். தமிழக பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கடந்த 5ம் தேதி இரவு மர்ம நபர்கள் சரமாரி வெட்டி படுகொலை செய்தனர். இதுவரை கொலை தொடர்பான சிசிடிவி காமிரா காட்சிகளை வைத்தும், கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை, அருள் என ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய 11 பேரை கைது செய்துள்ளனர். மேலும், கைதான 11 பேரிடமும் செம்பியம் போலீசார் விசாரிக்க முடிவு செய்தனர். அதன்பேரில் எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.

பின்னர் பாதுகாப்பு கருதி, பூந்தமல்லி கிளை சிறையில் இருந்த 11 பேரிடமும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, கைதான 11 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதியளித்தது. போலீஸ் காவலில் கைதான 11 பேரிடமும் ரகசிய இடத்தில் வைத்தும், கொலை தொடர்பான இடங்களிலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன் விசாரணையின்போது கைதானவர்களில் ஒருவரான ரவுடி திருவேங்கடம் தப்பியோட முயன்றபோது போலீசாரை தாக்கியதால், அவர் என்கவுன்டர் மூலம் சுட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து மீதமுள்ள 10 பேரிடமும் விசாரணை முடிந்து, நேற்று சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்பு மீண்டும் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் முக்கிய நபர்களாக கருதப்படும் ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த சரித்திர பதிவேடு ரவுடி திருமலை, வழக்கறிஞர் அருள் ஆகிய 3 பேரிடமும் கூடுதலாக விசாரிக்க வேண்டும். அவர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு கூடுதலாக 3 நாள் காவலில் எடுக்க செம்பியம் போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, கடந்த ஆண்டு ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யபட்டதற்கு பழிவாங்கும் வகையில்தான் இக்கொலை நடைபெற்றதா என்பது குறித்து ஆதாரங்களை திரட்ட, கொலையில் சம்பந்தப்பட்ட முக்கியமான 3 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும், இதுதொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்து, 3 நாள் காவலில் எடுக்க போலீஸ் தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கெனவே போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் 3 பேருக்கு போலீஸ் காவல் வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.