Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வக்கீல், வெளி விவகார நிபுணர், வரலாற்று ஆசிரியர், சமூக சேவகர் என மாநிலங்களவைக்கு 4 எம்பிக்கள் நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 80வது பிரிவின்படி, கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை மாநிலங்களவை உறுப்பினர்களாகக் குடியரசுத் தலைவர் நியமிக்க முடியும். இந்த நியமன பதவிக்காலம் ஆறு வருட காலத்திற்கு இருக்கும். இதற்கு முன்பு, தென் மாநிலங்களை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, திரைக்கதை ஆசிரியர் வி.விஜயேந்திர பிரசாத் மற்றும் சமூக சேவகர் வீரேந்திர ஹெக்டே ஆகியோர் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் மாநிலங்களவை எம்பிக்களாக நியமிக்கப்பட்டனர்.

அந்த வரிசையில், தற்போது காலியாக இருந்த இடங்களுக்கு நான்கு புதிய உறுப்பினர்களைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கு உள்ளிட்ட முக்கிய குற்ற வழக்குகளில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் உஜ்ஜ்வல் நிகம், முன்னாள் வெளியுறவு செயலாளர் மற்றும் வெளிநாட்டு விவகார நிபுணரான ஹர்ஷவர்தன் ஷ்ருங்கலா, புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும், இந்திய வரலாறு மற்றும் கலாசாரம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டவருமான டாக்டர் மீனாக்ஷி ஜெயின், கேரளாவைச் சேர்ந்த மூத்த சமூக சேவகர் மற்றும் கல்வியாளரான சி.சதானந்தன் மாஸ்டர் ஆகிய 4 பேரும் மாநிலங்களவை எம்பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர்; இதில் 233 பேர் மாநில சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; மீதமுள்ள 12 பேர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும், மாநிலங்களவையில் சட்டவிவாதங்களில் பங்கேற்கவும், நாடாளுமன்ற குழுக்களில் பணியாற்றவும், தங்கள் துறை அறிவைப் பயன்படுத்தி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் பங்களிக்கவும் முடியும். இருப்பினும், குடியரசுத் தலைவர் தேர்தல் உள்ளிட்ட சில முக்கிய வாக்கெடுப்புகளில் இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. இந்த நியமனங்கள், குடியரசுத் தலைவரின் அதிகாரத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டாலும், ஆளுங்கட்சியின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைவது வழக்கம். மேற்கண்ட நான்கு நபர்களும் தங்களது துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் என்பதால், மாநிலங்களவையில் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.