அகமதாபாத் விமான விபத்துக்கு என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைபட்டதே காரணம்: விசாரணை அறிக்கையில் பரபரப்பு தகவல்
டெல்லி: அகமதாபாத் விமான விபத்துக்கு என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைபட்டதே காரணம் என முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 242 பேருடன் சென்ற போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஜூன் 12 அன்று மதியம் 1.39 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மோதி நொறுங்கியது. லண்டன் செல்லும் விமானத்தில் 241 பேர் இறந்தாலும், ரமேஷ் என்ற பயணி அதிசயமாக உயிர் தப்பினார். மருத்துவக்கல்லூரி மீது விமானம் மோதியதில் அங்கு இருந்த ஐந்து எம்பிபிஎஸ் மாணவர்கள் உட்பட 29 பேர் பலியானார்கள்.
விபத்து பற்றி விமானப் படை, எச்.ஏ.எல். அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் குழு புலனாய்வு செய்தது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்துக்கு ஒன்றிய சிவில் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, விமானத்தின் கருப்புப் பெட்டிகளும் மீட்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அகமதாபாத் விமான விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கை அண்மையில் ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விசாரணைக் குழு சமர்ப்பித்தது.
இந்நிலையில் இந்தியாவையே உலுக்கிய அகமதாபாத்-லண்டன் விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியானது. விமான விபத்தின் கண்டெடுக்கப்பட்ட வாய்ஸ் ரெக்கார்டர், கருப்புப் பெட்டி மூலம் தகவல் சேகரித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 15 பக்க அறிக்கையில் விமான விபத்து தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. கடும் சேதமடைந்த கருப்புப் பெட்டியை அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லாமல் டெல்லியிலேயே வைத்து தரவுகளை சேகரிக்கப்பட்டது. அகமதாபாத் விமான விபத்துக்கு என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைபட்டதே காரணம்.
ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே 2 என்ஜின்களும் செயலிழந்தது. என்ஜின்களுக்கு எரிபொருள் செல்லும் வால்வு திடீரென ஆப் ஆகியுள்ளது. ஆனாலும் விமானம் மேல் எழும்ப முடியாமல் தரையில் விழுந்து நொறுங்கியது. கட்டடங்கள் மீது விழுந்து தீப்பிடித்ததே விமானம் முற்றிலும் உருக்குலைய காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போயிங் 787 விமானத்தின் என்ஜினை தயாரித்த ஜெனரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கையில்லை.
முதற்கட்ட அறிக்கை வெளியான நிலையில் விசாரணை தொடரும் என்றும், முழுமையான அறிக்கை வர 6 மாதங்கள் ஆகும் என்றும் விமான விபத்து குறித்து விசாரிக்கும் புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. இதனிடையே விசாரணையின் தீவிர தன்மையை கருதி குறிப்பிட்ட விவரங்கள் குறித்து கருத்து கூற இயலாது என ஏர்இந்தியா தெரிவித்துள்ளது.