Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் மக்கள் புனித நீராடல்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

ராமேஸ்வரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்தக் கடல், கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் உள்ளிட்ட நீர்நிலைகளில் பல ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோயில் உள்ளது. மாதந்தோறும் அமாவாசை நாட்களில் இங்கு வரும் மக்கள் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கோயிலில் வழிபடுவர்.

குறிப்பாக ஆடி, புரட்டாசி மற்றும் தை மாத அமாவாசை நாட்களில் கூட்டம் குவியும். ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன்படி, ஆடி அமாவாசையான இன்று அதிகாலையிலேயே பல்லாயிரக்கணக்கான மக்கள் ராமேஸ்வரத்தில் குவிந்து, அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்.

பின்னர் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தனர். இதையடுத்து ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிவிட்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி ராமநாதசுவாமி கோயிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. வழக்கமான பூஜைகளை தொடர்ந்து, காலை 9 மணியளவில் பர்வதவர்த்தினி அம்பாள் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து 11 மணிக்கு ஸ்ரீராமர் தங்கக்கருட வாகனத்தில், அக்னி தீர்த்த கடற்கரையில், தீர்த்தவாரிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

டெல்டா ஆடி அமாவாசையையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக காலையிலேயே ஏராளமானோர் குவிந்து தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக 500க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் அம்மா மண்டபத்தில் திரண்டிருந்தனர். இதேபோல் திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, முக்கொம்பு, தொட்டியம், முசிறி உள்ளிட்ட இடங்களில் காவிரி ஆற்றங்கரைகளில் முன்னோர்களின் நினைவாக ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

அதேபோல் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆறு புஷ்ப மண்டப படித்துறையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஐயாறப்பரை வழிபட்டனர்.  நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடல் மற்றும் கோடியக்கரை ஆதிசேது கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடினர். இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் காவிரி கடலில் சங்கமிக்கும் இடத்தில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். மயிலாடுதுறை துலாகட்ட காவிரியிலும் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.

கன்னியாகுமரி ஆடி அமாவாசையையொட்டி இன்று கன்னியாகுமரி, குழித்துறையில் லட்சக்கணக்கான மக்கள் பலிதர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். இன்று அதிகாலை 1 மணி முதலே முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் கொடுக்க கன்னியாகுமரியில் மக்கள் குவிந்தனர். பலி தர்ப்பணம் கொடுப்பதற்காக 200க்கும் மேற்பட்ட வேத விற்பனர்கள் கடற்கரையில் திரண்டனர். பின்னர் புரோகிதர்கள் வேத மந்திரங்கள் கூறி வாழை இலையில் எள்ளு, துளசி, தர்ப்பை, சந்தனம், சாதம் போன்றவை வைத்து முன்னோர்களை நினைத்து பலி தர்ப்பணம் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரிவேணி சங்கம சங்கிலித்துறை கடலில் புனித நீராடினர். தொடர்ந்து பக்தர்கள் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோயில், பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தனர். இதேபோல் குழித்துறையில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் இன்று ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.