சென்னை: கூடுவாஞ்சேரியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 5,250 கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது என தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தாம்பரம் காவல் ஆணையர் பேசுகையில் கூறியதாவது; மாணவர்கள் தங்கியுள்ள பகுதிகள், வீடுகள், கடைகள், ஓட்டல்களில் 100 போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். போலீசார் சோதனையில் கஞ்சா சாக்லேட்டுகள், குட்கா உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர்.
பறிமுதல் செய்வதோடு மட்டுமன்றி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கு தொடர்புகொண்டு மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தெரிவித்துள்ளோம். குறிப்பிட்ட தகவல்கள் அடிப்படையில் சோதனை நடத்தப்படுவது தொடரும். துணை ஆணையர், உதவி ஆணையர் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. 5 அடுக்குமாடி குடியிருப்புகள், பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.
நடப்பாண்டியில் இதுவரை 1,500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அளிக்கப்பட்டது. 5,250 கஞ்சா சாக்லேட் வைத்திருந்த ஒருவர் கைது; 7 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. போதைப்பொருள் பயன்பாடு குறித்து தகவல் கிடைத்தால் கல்விநிறுவனங்களில் சோதனை நடத்தப்படும். கல்வி நிறுவனங்களுக்கு தொடர்புகொண்டு மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தெரிவித்துள்ளோம். போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க உறுதிபூண்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.