46-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது திமுக இளைஞர் அணி: துணை முதல்வர் உதயநிதி , அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை: தமிழர்களை உயர்த்தும் திராவிட இயக்கத் தத்துவங்களை அடுத்தடுத்து வரும் இளம் தலைமுறையின் இரத்த அணுக்களில் ஏற்றும் கொள்கைப் பாசறையாம் திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்ட நாள் இன்று!
மதுரை ஜான்சி ராணி பூங்காவில் பூத்த நம் இளைஞரணி, 46-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வழிகாட்டலில் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் உருவாக்கப்பட்ட இளைஞரணி எனும் தீரர் படையின் இன்றைய செயலாளராகப் பணியாற்றுவதை எண்ணி பெருமை கொள்கிறோம்.
தமிழ்நாட்டின் இளைஞர்களை கொள்கை மயப்படுத்தும் இலக்கில் இருந்து சிறிதும் விலகாமல் கட்டுப்பாட்டுடன் கடமையாற்றும் நம் இளைஞரணி, கழகத்தின் நாற்றங்காலாக திகழ்கிறது.
களப் பணியிலும் - கொள்கை நெறியிலும் இளையச் சமுதாயத்தைத் தயார்படுத்த இளைஞரணி மேற்கொண்டு வரும் பணிகள் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டைக் காத்து நிற்கும். 2026 சட்டமன்றத் தேர்தலில் நம் கழக அணி, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிட ஓரணியில் தமிழ்நாட்டை திரட்டுவோம். தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க, தலைவர் அவர்களிட்ட கட்டளையை நிறைவேற்ற களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம்!
* அமைச்சர் அன்பில் மகேஷ்
என்னை தாலாட்டி வளர்த்த தாய்மடியாம் “கழக இளைஞரணி” தொடங்கப்பட்ட நாள்! கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் உருவாக்கப்பட்ட இளைஞரணி 46 ஆண்டுகளாக சிறிதும் இளைப்பாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த இளைஞர் படையின் தலைவராக செயலாற்றிக் கொண்டிருக்கிறார் கழக இளைஞரணிச் செயலாளர் துணை முதலமைச்சர்
உதயநிதிஸ்டாலின் அவர்கள். கட்டுப்பாடு கலையாமல் கொள்கை உறுதியோடு இளைஞர்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் கழக இளைஞரணிச் செயலாளர் அவர்கள்.
பெரியார்-அண்ணா-கலைஞர் ஆகியோரின் திராவிட முழக்கங்களை எதிரிகளுக்கு எச்சரிக்கையாகவும், எளிய மக்களுக்கு பாடமாகவும் வழங்கிக்கொண்டிருக்கும் இளைஞரணித் தம்பிகள் அனைவருக்கும் உங்களில் இருந்து வந்தவனாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.