காசாவில் கடந்த 3 நாட்களாக ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் 21 குழந்தைகள் உயிரிழப்பு: ஐ.நா அதிர்ச்சி தகவல்
காசா: காசாவில் கடந்த 3 நாட்களாக ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் 21 குழந்தைகள் இறந்திருப்பதாக ஐ.நா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 21 மாதங்களாகப் போர் நீடித்து வருகிறது. இந்தப் போரால் காசா பகுதியில் 58 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் படைகளின் தொடர் முற்றுகையால் காசா முழுவதும் உணவு மற்றும் குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. உதவி மையங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து காசாவில் களப்பணியில் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதனிடையே போரினால் மட்டுமின்றி போதிய உணவு கிடைக்காமல் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காசாவில் கடந்த 3 நாட்களாக ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் 21 குழந்தைகள் இறந்திருப்பதாக ஐ.நா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதனால், பட்டினியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. பட்டினிச் சாவால் இறந்தவர்களில் 80 பேர் குழந்தைகள் என்று காசா சுகாதாரத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.காசா நகரில் சுமார் ஒரு லட்சம் குழந்தைகளும், பெண்களும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். என்றும் தெரிவித்துள்ளது.