Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

12-ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்!

சென்னை: 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தவறிய மாணாக்கர்களின் உயர்கல்வி கனவை நனவாக்க துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இக்கல்வியாண்டே (2025-26) இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:- ஏழை, எளிய மாணாக்கர்கள் உயர்கல்வியினை பெற வேண்டும். அனைவருக்கும் சமமான உயர்கல்வி கிடைத்திட வேண்டும் என்பதற்காக, அரசுக் கல்லூரி இல்லாத பகுதிகளில் நடப்பாண்டில் மட்டும் புதியதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கிட தமிழ்நாடு முதலமைச்சரால் ஆணையிடப்பட்டு, அவ்விடங்களில் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், மாணவர்களின் தேவைக்கேற்ப 15,000க்கும் மேற்பட்ட மாணாக்கர் சேர்க்கை இடங்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான மாணாக்கர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு 07.05.2025இல் தொடங்கி தற்போது முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தவறிய மாணாக்கர்கள் தாங்கள் உயர்கல்வி வாய்ப்பை தவறவிட்டோம் என்று சோர்வடைந்து விடாமல் இருக்க உயர்கல்வி வாய்ப்பினை பெற்றிட வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களுக்கு உடனடியாக துணைத் தேர்வு நடத்தப்பட்டு தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் இக்கல்வியாண்டே உயர்கல்வி பயில ஏதுவாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு மாணாக்கர்கள் சேர்க்கைகான விண்ணப்பப் பதிவினை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிப்பதற்கு உரிய வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, மாணாக்கர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.