இந்தாண்டு இறுதியில் தேர்தல் வர உள்ளதால் அதிரடி; பீகாரில் 125 யூனிட் இலவச மின்சாரம்: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு
பாட்னா: பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில் வீடுகளுக்கு 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக நிதிஷ்குமார் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் இந்தாண்டு இறுதியில் முடிவடைகிறது. இதனால், அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் இறங்கி உள்ளன. காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சிபிஐ (எம்எல்) லிபரேஷன் உள்ளிட்ட பல கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.
அதேநேரத்தில், இந்த சவாலை சமாளிக்கவும், ஆட்சியை மீண்டும் தக்கவைக்கவும் நிதிஷ்குமார் பல திட்டங்களை தீட்டி வருகிறார். இந்நிலையில் பீகாரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அவர் இன்று காலை அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘பீகார் மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்க எனது அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அனைத்து வீடுகளுக்கும் 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வரும். அதாவது, ஜூலை மாத கட்டணத்தில் 125 யூனிட் வரை பயன்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. இதனால், மொத்தம் 1 கோடியே 67 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்.
குதிர் ஜோதி திட்டத்தின் கீழ், மிக ஏழை குடும்பங்களுக்கு சூரிய மின் தகடுகளை அமைப்பதற்கான முழு செலவையும் மாநில அரசே ஏற்கும். இதனால், அந்த வீடுகளுக்கு 125 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணம் வராது. அதே நேரத்தில், சூரிய ஒளி மூலம் அடுத்த 3 ஆண்டுகளுக்குள், 10,000 மெகாவாட் வரை மின்சாரம் தயாரிக்கப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.