Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தடை செய்யப்பட்ட ‘ஹிஸ்ப் உத் தஹ்ரீர்’ என்ற பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் 6 பேர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி

சென்னை: சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் டாக்டர் ஹமீது உசேன். பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியர். அண்ணா பல்கலை முன்னாள் கவுரவ பேராசிரியர். இவர், ‘ஹிஸ்ப்- உத்- தஹ்ரீர்’ இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டுள்ளார். இவரது தந்தை அகமது மன்சூர் மற்றும் இளைய சகோதரர் அப்துல் ரகுமான். இவர்கள் சென்னை ராயப்பேட்டை ஜான்ஜானிகான் சாலையில், ‘மாடர்ன் எசன்சியல் எஜுகேஷனல் டிரஸ்ட்’ என்ற பெயரில், ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் வாயிலாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஹிஸ்ப்- உத்- தஹ்ரீர் இயக்க கொள்கைகளை எடுத்து கூறி பிரசாரம் செய்துள்ளனர்.

மேலும், ‘டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்’ என்ற யூடியூப்’ சேனல் வாயிலாகவும் கருத்துகளை வெளியிட்டு வந்துள்ளனர். இதை தீவிரமாக கண்காணித்து வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் நேற்று கைது செய்தனர். ஹிஸ்ப் உத் தஹ்ரீர் (விடுதலை கட்சி) என்ற சர்வதேச இஸ்லாமிய அடிப்படைவாத அரசியல் அமைப்பின் கொள்கைகளை பரப்பும் செயலில் ஹமீது உசேன் உள்ளிட்ட 6 பேர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

ஹமீது உசேன் உள்ளிட்ட 6 பேரும் பரப்பும் கருத்துகள் அரசியல் சட்டத்துக்கும், சமூகத்துக்கும் விரோதமானது என்பதால், அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து, தண்டையார்பேட்டை, செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு விசாரித்தனர்.

அதில், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக தண்டையார்பேட்டையை சேர்ந்த அகமது அலி, காமராஜபுரத்தை சேர்ந்த முகமது மவுரிஸ், காதர் நவாஸ் ஷெரிப் என்கிற ஜாவித்தை உபா சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக சென்னையில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.