ரூ.17,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கு தொழிலதிபர் அனில் அம்பானி நவ.14 ஆஜராக வேண்டும்: ஈடி மீண்டும் சம்மன்
புதுடெல்லி: தொழிலதிபர் அனில் அம்பானி. இவர் தன் நிறுவனங்களின் பெயரில் வாங்கிய வங்கி கடன்களை சட்ட விரோதமாக பிற நிறுவனங்களுக்கு பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ), வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்த மோசடி குறித்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையில் பாரத ஸ்டேட் வங்கியில் பல்வேறு நிறுவனங்களின் பெயரில் வாங்கப்பட்ட ரூ.17,000 கோடி அளவிலான பணம் சட்டவிரோதமாக மாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் அனில் அம்பானியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, அனில் அம்பானி வௌிநாடுகளுக்கு செல்ல தடை விதித்தது. இதன் தொடர்ச்சியாக ரூ.7,500 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் மத்திய கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகமும் விசாரணையை தொடங்கி உள்ளது. இந்நிலையில் வரும் 14ம் தேதி அனில் அம்பானி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை இரண்டாம் முறை சம்மன் அனுப்பி உள்ளது.
