Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள முருகன் கோயில் குளத்தின் கரை உடைந்து நடைபாதை சேதம்: அச்சத்துடன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதியில் 15 வார்டுகளில் 20 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வசந்த பஜார், திருவள்ளூர் நகர், ரயில்வே ஸ்டேஷன் சாலை, காட்டு கொள்ளை தெரு, தபால் தெரு, மேட்டு தெரு, கோட்டக்கரை, மா.பொ.சி.நகர், விவேகானந்தா நகர், வெட்டு காலனி, மேட்டு காலனி, கோரிமோடு, கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலை, சரண்யா நகர், கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலை, ரெட்டம்பேடு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராமப்புற பெண்கள் மற்றும் இளைஞர்கள் முதியோர்கள் ஆகியோர் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முருகன் கோயிலுக்கு அடிக்கடி வந்து வழிபடுவது வழக்கம்.

இதில் குறிப்பாக இளம் பெண்கள் முருகனுக்கு விளக்கேற்றி கோயிலை வாரந்தோறும் சுற்றி வந்தால் அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் குழந்தை பாக்கியம் ஆகிய பல்வேறு அனுகிரகங்கள் கிடைப்பதாக பெண்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். அது மட்டுமல்ல இந்த முருகன் கோவில் சுமார் 50 வருடங்களுக்கு மேல் உள்ள பழமையான கோயிலாகும். இந்த கோயில்களில் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பலர் ஐயப்பன் மலைக்கு இருமுடி கட்டுவதும், இளம் பெண்கள் பால்குடம் எடுப்பதும் வழக்கம்.

இந்த முருகன் கோயில் எதிரி சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் மிகப் பழமை வாய்ந்த குளம் உள்ளது இந்த குளத்தில்தான் அப்போதைய மூதாதையர்கள் குடங்களுடன் சென்று தண்ணீர் எடுத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் தண்ணீர் குடிப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர்.  ஆனால் தற்பொழுது இந்த குளத்தில் ஆகாயத்தாமரை, புல் பல்வேறு குப்பைக் கழிவுகள் சூழ்ந்து இருப்பதால் குளம் பயன்பாடற்று கிடக்கிறது. இந்த குளத்தைச் சுற்றிலும் நடைபாதை உள்ளது.

அந்த நடைபாதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடும் மழை காரணமாக உடைந்து குளத்தில் சரிந்து அபாயகரமாக இருந்தது. இது சம்பந்தமாக அப்பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் தீபாமுனுசாமி மற்றும் பொதுமக்கள் பலமுறை இந்து அறநிலை துறை அதிகாரிகளுக்கு, இந்த முருகன் கோயில் குளத்திற்கு சுற்று சுவர் அமைத்து நடைபாதையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்பு சுற்று சுவர் கட்டுவதற்கான அளவீடு பணிகளும் நடைபெற்றன. ஆனால் இதனால் வரை அந்தப் பணிகள் நடைபெறாமல் இந்து அறநிலைத்துறை காலம் தாழ்த்தி வருகிறது.

இதைத்தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் அமாவாசை, பௌர்ணமி, செவ்வாய்க்கிழமை தோறும் பெண்கள் சுற்று சுவர் இல்லாமல் இருக்கும் அந்த சாலையை கடக்கும் பொழுது குழந்தைகள் முதல் பெரியவர்களை கீழே விழுந்து விடுவோமோ என அச்சத்துடனும் செல்கின்றனர். அது மட்டும் அல்ல அப்பகுதியைச் சேர்ந்த கால்நடை மாடுகள் அடிக்கடி உள்ளே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகிறது. இதனை உடனடியாக சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் எனவும் குலத்தை சீரமைக்க கோரியும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கருக்கு இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.