கருத்தப்பிள்ளையூர்-கீழ ஆம்பூர் சாலையில் விபத்தை தடுக்கும் வகையில் குளத்துக்கரையில் தடுப்பு சுவர் அமைக்கப்படுமா?
*பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கடையம் : கருத்தப்பிள்ளையூர்- கீழ ஆம்பூர் சாலையில் விபத்தை தடுக்கும் வகையில் குளத்துக்கரையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர். தென்காசி மாவட்டம் கடையம் கருத்தப்பிள்ளையூரில் இருந்து கீழ ஆம்பூர் செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலையில் 3 குளங்கள் இருக்கிறது. வடக்கு பக்கம் மிகவும் பள்ளமான வயல்வெளிகள் இருக்கிறது. இந்த சாலை வழியாக தான் 10 கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பேருந்துகள் செல்கிறது. சாலையில் எதிர்திசையில் இருந்து பேருந்தோ அல்லது ஏதோ வாகனங்கள் வந்தால் விலகுவதற்கு சரியான இடவசதி இல்லாமல் பின்னோக்கி செல்லக்கூடிய ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது.
எனவே குளத்துக்கரையிலும் தடுப்புச்சுவர் கட்டி சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் ‘‘10க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் இப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படும் நிலையில் வாகன ஓட்டிகள் சாலையை விட்டு வாகனத்தை கீழே இறக்கினால் குளத்திலேயோ அல்லது வயல் வெளியிலேயோ விழும் அபாயம் உள்ளது. வயல்வெளியில் விழுந்தால் சிறிய அடியுடன் தப்பித்து கொள்ளலாம்.
குளத்தில் விழுந்தால் என்ன ஆவது என்பதை பொருட்படுத்தாமல் அலட்சியமாக உள்ளனர். ஏற்கனவே இப்பகுதியில் சிறு,சிறு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் பெரிய அளவில் விபத்து நடைபெறவில்லை. எனினும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மேலும் குறுகிய சாலை என்பதால் ஒரு வாகனம் சென்றால் மற்றொரு வாகனம் வர முடியாத நிலை தான் உள்ளது.எனவே இந்த சாலையை விரிவுப்படுத்த வேண்டும். அதே போன்று குளத்துக்கரையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்’’ என்றனர்.