வங்கிகளின் தனியார்மயம் தேச நலனை பாதிக்காது என நிர்மலா சீதாராமன் பேசியது அதிர்ச்சி அளிக்கிறது: செல்வப்பெருந்தகை
சென்னை: வங்கிகளின் தனியார்மயம் தேச நலனை பாதிக்காது என நிர்மலா சீதாராமன் பேசியது அதிர்ச்சி அளிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வங்கிகளை தேசியமயமாக்கியது எதிர்பார்த்த பலன்களை கொடுக்கவில்லை, வங்கிகளின் தனியார் மயம் தேச நலனை பாதிக்காது என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 14 வங்கிகளை 1969-ல் தேசியமயமாக்குவதற்கு எடுத்த முயற்சிகளை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அன்று மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசியமய நடவடிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. அதை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத்தில் 26-வது திருத்தம் கொண்டு வந்து அத்தகைய முற்போக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அன்றைய பிரதமர் இந்திரா காந்தி எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக ரூபாய் 50 கோடி டெபாசிட் தொகை பெற்றிருந்த 14 வங்கிகள் தேசியமயமாக்கப் பட்டபோது இருந்த வங்கிகளின் எண்ணிக்கை 8027. ஆனால், அந்த வங்கிகளின் எண்ணிக்கை 2023-ல் 1 லட்சத்து 51 ஆயிரத்து 192 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல, 11 லட்சத்து 75 ஆயிரத்து 149 பேர் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணியாற்றுகிறார்கள்.
இந்தியாவில் உள்ள மொத்த வங்கிகளில் 84 சதவிகிதம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. வங்கிகளின் எண்ணிக்கை 1969-ல் இருந்ததை விட 800 சதவிகிதம் கூடியதால் இந்தியாவின் அனைத்து கிராமங்களும் வங்கி சேவைகளின் காரணமாக இணைக்கப்பட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தற்போது 52 லட்சத்து 60 ஆயிரத்து 400 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருக்கிறது.
வங்கிகளில் உள்ள மொத்த டெபாசிட் தொகை ரூபாய் 67 லட்சத்து 50 ஆயிரத்து 400 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதன்மூலமாக விவசாயிகள், சிறுகுறு தொழில்கள், தொழில் முனைவோர், வணிக நிறுவனங்கள் பயன் பெற்று இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறார்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மொத்தம் 11.6 கோடி வங்கி கணக்குகளும், 9.40 கோடி கடன் அட்டைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்திய மக்களின் குறிப்பாக கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளே தவிர, தனியார் வங்கிகள் அல்ல. நகர்ப்புறத்தில் இருப்பவர்களுக்கு தான் தனியார் வங்கிகள் சேவை செய்கிறதே தவிர, கிராமப்புற மக்களிடம் அவர்களது சேவை சென்றடையவில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிற ஊதியம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தான் பெறப்பட்டு வருகிறது.
இந்திய மக்களின் வாழ்வாதாரத்தோடு சம்மந்தப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் முக்கியத்துவத்தை நிதியமைச்சரே குறைத்து பேசுவது மிகுந்த கண்டனத்திற்குரியது. இந்திராகாந்தி எந்த நோக்கத்திற்காக வங்கிகளை தேசியமயமாக்கினாரோ அந்த நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த யதார்த்த உண்மையை மூடி மறைத்து வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை என்று கூறுவது வங்கி துறையை தனியார் துறைக்கு தாரை வார்ப்பதற்கான திட்டமிட்ட முயற்சியாகும்.
இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணியாற்றுகிற லட்சக்கணக்கான பணியாளர்கள் வங்கிகளை தனியார்மயமாக்குவதை கடுமையாக எதிர்த்து போராடி வருகிறார்கள். அன்னை இந்திரா காந்தியின் புகழை கெடுக்கின்ற நோக்கத்தில் நிர்மலா சீதாராமன் ஈடுபடுவதை நாட்டு மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
