*தலைமறைவான மேலும் 3 பேருக்கு போலீஸ் வலை
பொள்ளாச்சி : தொழிலாளியை அடித்து கொலை செய்த வங்கதேச வாலிபரை போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி உடுமலை ரோடு சின்னாம்பாளையத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் செல்லும் வழியில் கடந்த வாரம் வாலிபர் ஒருவர், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கிழக்கு ஸ்டேஷன் போலீசார், சடலத்தை கைப்பற்றி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் வாலிபரை தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் இறந்தவர் மேற்கு வங்கம் பெகுலாவை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராகேஷ் தாஸ் (30) என தெரியவந்தது. கொலையாளியை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், தீவிர விசாரணை நடத்தி ராகேஷ் தாஸை கொலை செய்தது, வங்கதேசத்தை சேர்ந்த பிரமதா பிஸ்வாஸ் (45) என்று கண்டுபிடித்தனர்.
இதையடுத்து எஸ்ஐ கவுதமன் தலைமையிலான தனிப்படை போலீசார் வங்கதேசம் தப்பிச்சென்ற பிரமதா பிஸ்வாஸ்ஸை நேற்று முன்தினம் அங்கு கைது செய்தனர். பின்னர் அவரை அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி, விமானம் மூலம் நேற்று முன்தினம் பொள்ளாச்சி அழைத்து வந்தனர்.
வடமாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளர்களான ராகேஷ்தாஸ், பிரமாதாபிஸ்வாஸ் மற்றும் 3 பேர் என மொத்தம் 5 பேர் பொள்ளாச்சியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளனர். அவர்கள் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவது வழக்கம். கடந்த வாரம் உடுமலைரோடு சின்னாம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் அருகே 5 பேரும் சேர்ந்து ஒன்றாக மது அருந்தினர்.
அப்போது மது வாங்கிகொடுப்பது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ராகேஷ் தாஸிடம் மதுவாங்கி கொடுக்குமாறு கேட்டு வாங்கி கொடுக்காத விரக்தியில் பிரமாதா பிஸ்வாஸ் உள்பட 4 பேரும் சேர்ந்து ராகேஸ்தாஸை கடுமையாக தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த ராகேஷ்தாஸ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதையறிந்த 4 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில், பிரமாதா பிஸ்வாஸ் தனது சொந்த நாடான வங்க தேசத்துக்கு ரயில் மூலம் சென்று பதுங்கி உள்ளார்.
தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு, கொலையாளியின் வீட்டுக்கு விரைந்து சென்று அவரை கைது செய்து அழைத்து வந்துள்ளனர். தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.