டாக்கா: வங்கதேசத்தில் ஆடை தொழிற்சாலை, ரசாயன கிடங்குகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 பேர் பலியாகினர். வங்கதேச தலைநகர் டாக்காவில் ரூப்நகரின் மிர்பூர் என்ற இடத்தில் மிகப்பெரிய ஜவுளி உற்பத்தி ஆலை இயங்கி வருகிறது. இங்கு நேற்று வழக்கம்போல் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த ஆலையையொட்டி ரசாயன கிடங்கு அமைந்துள்ளது. இந்த கிடங்கில், ரசாயனங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை ரசாயன கிடங்கில்திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது மள,மளவென அருகிலிருந்த ஜவுளி உற்பத்தி தொழிற்சாலைக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் 16 பேர் பலியாகினர். படுகாயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.