Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வங்கதேசத்தில் தீவிரமடையும் போராட்டம் துப்பாக்கி சூட்டில் 22 பேர் பலி

டாக்கா: வங்கதேசத்தில் அரசின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். மேலும் கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தை கலைத்துள்ளனர். வங்கதேசத்தில் பாகிஸ்தானுடனான போரின்போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை அரசு பின்பற்றி வந்தது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடந்த 2018ம் ஆண்டு இந்த இடஒதுக்கீடு முறை நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 30 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்துவதற்கு வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு ஒரு சாரார் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாரபட்சமான இந்த இட ஒதுக்கீட்டை தகுதி அடிப்படையில் மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளது.

இதனால் வங்கதேசத்தில் கடந்த ஒரு வாரமாக போராட்டங்கள் நடந்து வந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கடந்த திங்கள் முதல் இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாணவர் அமைப்புக்களும் போராட்டத்தில் குதித்துள்ளன. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அரசு தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வெளியே திரண்ட போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த எல்லைப்பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். மேலும் ஒலி எழுப்பும் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். மேலும் போலீசார் கண்ணீர் புகைகுண்டு மற்றும் ரப்பர் குண்டுகளால் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். இதனிடையே போராட்டத்தில் 22 பேர் பலியானதாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியானது. இந்த உயிரிழப்பை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. நேற்று காலை தலைநகர் டாக்காவில் இன்டர்நெட் மற்றும் செல்போன் சேவை முடக்கப்பட்டது.