வெஸ்ட் இண்டீசுடன் ஒரு நாள் கிரிக்கெட்; 179 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி: தொடரையும் கைப்பற்றி அசத்தல்
டாக்கா: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் போட்டிகள் நடந்தன. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் 2 அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன. இதன் காரணமாக தொடர் 1-1 என சமனில் இருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் குவித்தது. சவுமியா சர்கார் 91 ரன், சைப் ஹசன் 80 ரன் விளாசினர்.
தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 30.1 ஓவர்களில் 117 ரன்னில் சுருண்டது. இதனால் வங்கதேச அணி 179 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-1 என்ற கணக்கில் தங்கள் வசமாக்கியது. தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி வரும் 27ம் தேதி நடக்கிறது.
