Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வங்கதேச அரசு பணிகளில் 30% இடஒதுக்கீடு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

டாக்கா: வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30% இடஒதுக்கீடு முறையை ரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக மாபெரும் போர் நடந்தது. இந்த போரில் ஏராளமானோர் நாட்டுக்காக உயிரிழந்தனர். இந்த போரில் வெற்றி பெற்று வங்கதேசம் தனி நாடாக உருவானது.

இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு வங்கதேச அரசு பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து கடந்த 2018ம் ஆண்டு மாணவர்கள் மாபெரும் போராட்டம் நடத்தியதால் இந்த இடஒதுக்கீடு முறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வங்கதேச நாடாளுமன்றத்துக்கு கடந்த ஜனவரி மாதம் நடந்த பொதுதேர்தலில் அவாமீ லீக் கட்சி பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து அவாமீ லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா 8வது முறையாக வங்கதேச பிரதமராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில் வங்கதேச உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மீண்டும் கொண்டு வர ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு முடிவு செய்தது. இது வங்கதேச மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் குதித்தனர். தலைநகர் டாக்கா உள்பட பல்வேறு இடங்களிலும் மாணவர்கள் நடத்திய போராட்டங்களில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. காவல்துறையினர் மீது கற்களை வீசி மாணவர்கள் தாக்கியதில் ஏராளமான காவலர்கள் படுகாயமடைந்தனர். போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் காவல்துறையினர் கலைத்தனர்.

மேலும் போராட்டத்தின் உச்சகட்டமாக மாணவர்கள் அரசு தொலைக்காட்சி நிலையத்தை முற்றுகையிட்டு தீ வைத்தனர். டாக்காவின் வடக்கே நர்சிங்டி நகரில் உள்ள சிறைச்சாலைக்கும் தீ வைக்கப்பட்டது. இதை பயன்படுத்தி 800க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர். மாணவர்கள் போராட்டம் காரணமாக வங்கதேசமே போர்க்களம் போல் மாறியது. நிலைமையை கட்டுக்குள் மாணவர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு கால வரையின்றி விடுமுறை அளித்துள்ள அரசு போராட்டக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் போராட்டத்தை கட்டுப்படுத்த ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது.

வன்முறை மேலும் பரவால் தடுக்க செல்போன், இணையதள சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதால் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. கடந்த 16ம் தேதி நடந்து வரும் வன்முறை போராட்டங்களில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக அங்கு படிக்க சென்ற இந்திய மாணவர்கள் நாடு திரும்பி வருகின்றனர். இதுவரை 1,000 இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பி உள்ளதாக வௌியுறவு அமைச்சம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுளுக்கு அரசு பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து, அதனை 5 சதவீதமாக குறைக்க வலியுறுத்தி வங்கதேச உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு அடுத்த மாதம் விசாரணைக்கு வர இருந்த நிலையில் மாணவர்களின் தீவிர போராட்டம் காரணமாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “அரசு பணிகளில் தேர்வுகள் மூலம் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களுக்கு இடஒதுக்கீட்டில் 93 சதவீதமும், உயிர் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்தும், மேலும் 2 சதவீதத்தை சிறுபான்மையினர், மாற்று திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு வழங்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தவிட்டனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து வங்க தேசத்தில் மீண்டும் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

379 மாணவர்கள் நாடு திரும்பினர்

வங்கதேசத்தில் இருந்து, திரிபுராவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடி வழியாக கடந்த 2 நாட்களில் 379 மாணவர்கள் இந்தியாவுக்கு திரும்பியதாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்தார். வங்கதேசத்துக்கு கல்வி பயில சென்ற அசாம் மாநிலத்தை சேர்ந்த 120 மாணவர்கள் நேற்று பத்திரமாக சொந்த மாநிலத்துக்கு திரும்பினர். இதுகுறித்து உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் அஜய் திவாரி, “அசாமை சேர்ந்த 120 மாணவர்கள் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சுதர்கண்டி, மேகாலாயவின் டர்கி மற்றும் திரிபுரா வழியாக நாடு திரும்பி உள்ளனர். வரும் நாட்களில் மேலும் சில மாணவர்கள் திரும்பி வருவார்கள்” என்றார்.

வங்கதேச அகதிகளுக்கு மே.வங்கத்தில் அடைக்கலம் - மம்தா

இதனிடையே வங்கதேச அகதிகளுக்கு மேற்குவங்கத்தில் அடைக்கலம் தரப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிய பேசிய மம்தா, “வங்கதேசத்தில் நடப்பது அந்நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்பதால் அதைப்பற்றி நான் பேச மாட்டேன். கொந்தளிப்பில் உள்ள நாடுகளின் அகதிகளுக்கு இந்திய எல்லைகளில் உள்ள நாடுகள் அடைக்கலம் தருவது பற்றி ஐநா தீர்மானத்தில் உள்ளது. அதன்படி, வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேச மக்களுக்கு அடைக்கலம் தர மேற்குவங்கத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்” என்று கூறினார்.