வங்கதேசத்தில் வெள்ளத்திலும் பள்ளி மாணவர்களைத் தேடி வரும் மிதக்கும் படகு வகுப்புகள்: ஆர்வமாக கல்வி பயிலும் மாணவர்கள்!
டாக்கா: வங்கதேசத்தில் கனமழை ஏராளமான கிராமங்களை மூழ்கடித்த நிலையில், பெரும் வெள்ளத்திலும் பள்ளி மாணவர்களுக்கு கை கொடுக்கின்றன மிதக்கும் வகுப்பறைகள். தண்ணீர் பரப்பில் தேர் போல் மெல்ல மிதந்து செல்லும் இது சுற்றுலா படகு அல்ல. மழை, வெள்ளம் ஏற்படும் காலங்களிலும் குழந்தைகள் கல்வியை தொடர வலம்வரும் மிதக்கும் பள்ளிகள் இவை. சமீபத்தில் பெய்த கனமழையால் மேற்கு சலான் படுகையில் உள்ள பங்குரா கிராமத்தில் வீடுகள் மூழ்கி விட்டதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை.
ஆனால் பெரும் வெள்ளத்திலும் கல்வியை தொடரும் வகையில் படகுகளில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் பள்ளிகளில் மாணாக்கர்கள் கல்வியை தொடர்ந்து வருகின்றனர். வெள்ளத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை அறிந்த தன்னார்வலர் அமைப்பு ஒன்று ஆசிரியர்களின் பங்களிப்புடன் இயங்கும் 25க்கும் மேற்பட்ட படகுகளை நடமாடும் வகுப்பறைகளாக மாற்றி இருக்கிறது. சூரிய ஒளி ஆற்றல் மூலம் படகுகளில் மின் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தன்னார்வலர்களின் மிதக்கும் பள்ளிகளால் வறுமை மற்றும் சமூக காரணங்களால் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களும் பயனடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.