நெல், கரும்பு, மஞ்சள் போன்ற பயிர்கள் விதைத்து வளர்த்து மகசூல் பெருக்கி அறுவடை முடிவில் விற்பனை செய்வதன் மூலம் ஒரு வருமானம் கிடைக்கும். அது, ஒரு ரகம். கீரை, காய்கறி, மலர் போன்றவற்றை சாகுபடி செய்வதன்மூலம் தினசரி வருமானம் பார்க்கலாம். இது ஒரு ரகம். இந்த இரண்டு முறையிலுமே வருமானம் பார்த்து வருபவர்தான் திருவள்ளூர் மாவட்டம் புன்னபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராமன். கருப்புகவுனி, மாப்பிள்ளைச் சம்பா என பாரம்பரிய ரகங்களை பயிரிட்டு வரும் ஜெயராமன், 30 செண்டில் பெங்களூர் ரோஸையும் பயிரிட்டிருக்கிறார். நெல் விதைத்து ஒரு மாதமான வயல்வெளி ஒருபுறம் இருக்க, மறுபுறம் இந்த ரோஸ் சாகுபடியை செய்த வண்ணம் இருக்கிறார் ஜெயராமன். காலை ஆறு மணிக்கெல்லாம் பெங்களூர் ரோஸை பறிக்கத் தொடங்கிவிடுவோம் என்றதும், அதற்கு முன்பாகவே அதிகாலையிலே நாங்கள் அவரது வயலுக்குச் சென்றுவிட்டோம். நாங்கள் செல்வதற்கும் அவர்கள் மலர் பறிப்பதற்கும் சரியாக இருந்தது. பெங்களூர் ரோஸை பறித்தபடியே எங்களிடம் பேசத் தொடங்கினார் ஜெயராமன்.
எங்கள் ஊரில் சுமார் 500 வீடுகள் இருக்கும். இதில், 400 வீடுகளுக்கு விவசாயம்தான் தொழில். நெல் சாகுபடி எந்தளவிற்கு இருக்கிறதோ, அதேயளவிற்கு மலர் சாகுபடியும் இருக்கிறது. மல்லி, கனகாம்பரம், ரோஸ், சாமந்தி என அனைத்து வகையான மலர்களுமே சாகுபடி செய்யப்படுகிறது. நானும் 30 சென்டில் ரோஸ் சாகுபடி செய்து வருகிறேன் என்றவர் மேலும் தொடர்ந்தார். நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே எனது அப்பா படித்தது போதும், விவசாயத்தை கத்துக்கோ எனச் சொல்லி வயல் வேலை செய்யச் சொன்னார். அப்படித்தான் நான் விவசாயத்திற்குள் வந்தேன். அப்போ தொடங்கிய விவசாயம். இப்பவரை அதுதான் சோறு போடுது. அப்பாவோடு சேர்ந்து விவசாயம் செய்ததுபோக, கடந்த 15 வருடங்களாக தனியாக விவசாயம் செய்து வருகிறேன். எனக்குச் சொந்தமாக இரண்டு ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அதில் ஒரு பக்கம் நெல்லும், இன்னொரு பக்கம் இந்த ரோஸ் சாகுபடியும் செய்திருக்கிறேன்.
30 சென்டில் ரோஸ் சாகுபடி செய்ய எனக்கு 800 ரோஸ் செடிகள் தேவைப்பட்டது. ஒரு செடி ரூ.20க்கு 800 செடிகளை ஓசூரில் இருந்து வாங்கி வந்தேன். ஒரு செடிக்கும் அடுத்த செடிக்கும் உள்ள இடைவெளி 2 அடியாகவும், இரண்டு செடிகளுக்கு இடையே உள்ள அகலம் 9 அடியாகவும் இருக்கும்படி வாங்கி வந்த செடிகளை நட்டுவைத்தேன். ரோஸ் செடி நன்கு படர்ந்து பெரிய அளவில் வளரும் என்பதால் 9 அடி அகலம் தேவைப்படும். செடி நட்ட அடுத்த நாளில் செடிக்கு முதல் தண்ணீர் கொடுக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, செடி வளரும் வரை ஈரப் பதம் எப்போதும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். செடி நட்ட ஒரு மாதத்திற்குள் இருந்தே பூ மொட்டு வைக்கத் தொடங்கிவிடும். முதல் ஆறு மாதத்தில் இருந்தே நான்கு முதல் ஆறு கிலோ வரை மகசூல் கொடுக்க ஆரம்பித்துவிடும்.
என்னிடம் உள்ளச் செடி மூன்று வருடத்துச்செடி. இந்தச் செடிகளில் இருந்து தினமுமே பூ சாகுபடி செய்து கொண்டிருக்கிறேன். முதல் ஆறுமாதம் செடி வளர்வதற்கு எடுத்துக் கொண்டாலுமே, அடுத்தடுத்த மாதங்களில் இருந்து நல்ல மகசூல் எடுக்கலாம். நான் அதிகபட்சமாக எனது 30 சென்டில் இருந்து ஒரு நாளைக்கு 18 கிலோ ரோஸ் வரை சாகுபடி செய்திருக்கிறேன். வருடத்திற்கு ஒரு முறை செடியை கவாத்து செய்ய வேண்டும். அப்போதுதான், தொடர்ந்து நல்ல முறையில் மகசூல் கொடுக்கும். அதேபோல், ஆறு மாதத்திற்கு ஒரு முறை களை பறிக்க வேண்டும். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை செடிகளுக்கு புண்ணாக்கு கலந்த உரங்கள் மற்றும் இயற்கை முறையில் திரவ உரங்கள் ஆகியவற்றைத்தான் பயிருக்கு கொடுத்துவருகிறேன்.
அதேபோல், ரோஸ் செடிகளுக்கு இடையே உள்ள 9 அடி இடைவெளியில் சாமந்தி, மிளகாய் போன்றவற்றை ஊடு பயிராகவும் பயிரிடலாம். ஊடுபயிர் பயிரிடுவதன் மூலம், ரோஸ் செடிகளுக்குத் தேவையான சத்துக்களும் கிடைக்கின்றன. இந்த ரோஸ் பூக்களை தினமும் அறுவடை செய்து அருகே இருக்கிற பூ மார்க்கெட்டில் நேரடியாக நானே விற்பனை செய்கிறேன். பூவைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளுமே விலை மாற்றம் இருக்கும். விஷேச நாட்களில் பூவின் விலை அதிகமாக இருக்கும். ரோஸைப் பொருத்தவரை கிலோ 20ல் இருந்து 200 வரை என அதன் விலை மாறிக்கொண்டே போகும். இந்த ரோஸ் சாகுபடி செய்வதன் மூலம், வெளியே ஒரு நாள் வேலைக்குச் சென்றால் என்ன கிடைக்குமோ அதை எனது தோட்டத்தில் வேலை செய்து நானே சம்பாதித்துக் கொள்கிறேன். அதுபோக, நெல் வயலில் இருந்து கிடைக்கும் வருமானம் தனி என மகிழ்ச்சியோடு பேசி முடித்தார் ஜெயராமன்.
தொடர்புக்கு:
ஜெயராமன்: 9787131876.