பெங்களூருவில் பல ஆயிரம் கோடியில் ரியல் எஸ்டேட் தொழில்; நெருக்கடி கொடுக்கும் பாஜ தனிக்கட்சி தொடங்க காத்திருக்கும் அண்ணாமலை
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவில் இணையவே முடியாது என்ற நிலையில் விஜய் கட்சியில் சேர்ந்துவிட்டார். செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி.தினகரன், ஆகியோரை வைத்து அதிமுக-பாஜ கூட்டணிக்கு நெருக்கடி கொடுத்து வந்த அண்ணாமலை, பெங்களூருவில் பல ஆயிரம் கோடியில் அவர் நடத்தி வரும் ரியல் எஸ்டேட் தொழிலை வைத்து பாஜ மேலிடம் நெருக்கடி கொடுப்பதால், எப்போது கட்சியில் இருந்து நீக்குவார்கள், புதிய கட்சி தொடங்கலாம் என காத்திருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா, அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று சிறைக்கு சென்று திரும்பி வருவதற்குள் அவரது பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டதுடன் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இவர்களில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் எப்படியாவது அதிமுகவில் இணைந்துவிட வேண்டும் என்பதில் அதிதீவிரமாக இருந்து வருகின்றனர்.
டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியையும், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகின்றனர். அதிமுக இவ்வாறு பிளவுபட்டு கிடக்கும் நிலையில் அனைவரையும் ஒன்றிணைத்து விடுவோம் என கூறியதால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 3 பேரும் பாஜவுக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால், எங்கள் கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி உறுதியாக கூறிவிட்டார். அதையும் தாண்டி தலையிட்டால் கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிடுவோம் எனவும் அதிரடியாக கூறினார். தற்போதுள்ள நிலையில் அதிமுகவும் கைவிட்டு போனால், தமிழ்நாட்டில் சுத்தமாக ஓரம் தள்ளப்பட்டு விடுவோம் என்று கருதி பாஜ அமைதியாக இருந்தது.
முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் இந்த கோரிக்கையை வலியுறுத்திய நிலையில், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பாஜ அவரை டெல்லிக்கு அழைத்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது. இதனை செங்கோட்டையன் நம்பினார். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் நெருக்கடியின் காரணமாக செங்கோட்டையனுடன் நாங்கள் யாரும் பேசவில்லை என பாஜ மறுத்துவிட்டது. இதனால் செங்கோட்டையன் கடும் அதிர்ச்சியடைந்தார். எப்படியாவது கட்சியை ஒருங்கிணைத்துவிடலாம் என்றிருந்த நிலையில் செங்கோட்டையனுக்கு இருந்த முழுநம்பிக்கையும் போய்விட்டது.
வரும் 30ம்தேதி கோபிசெட்டிப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்தை நடத்த இருக்கிறார். இந்நிலையில் அவருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் உடனடியாக நடிகர் விஜய் கட்சியில் செங்கோட்டையன் சேர்ந்தார். இதனால் எப்படியாவது அதிமுகவில் இணைந்துவிடலாம் என்றிருந்த தினகரன், பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் எப்படியாவது எடப்பாடி பழனிசாமியை ஒழித்து கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த 4 பேரும், அவர்களுடன் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் சேர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர் தான் அடிக்கடி அவர்களை ரகசியமாக சந்தித்து வந்தார்.
பாஜ மாநில தலைவர் பதவி பறிபோன பிறகு அண்ணாமலை கட்சி செயல்பாடுகளில் அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை. தனக்கு முக்கிய பொறுப்பு எதாவது கொடுத்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தார். ஆனால், அவர் அதிமுக-பாஜ கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவதாக மேலிடத்தில் தமிழக பாஜ தலைவர்களும், அதிமுக நிர்வாகிகளும் புகார் கூறியதால் அவருக்கு எந்த பதவியும் கொடுக்காமல் வைத்துள்ளனர். அதோடு அண்ணாமலை சமீபத்தில் பெங்களூருவில் தனது மனைவியின் சகோதரர் பெயரில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடங்கி பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இதுபற்றி பரபரப்பான புகார் எழுந்தபோது, நான் தொழில் செய்யக்கூடாதா, என் குடும்பத்தைக் காப்பாற்ற பிச்சையா எடுக்க முடியும், இந்த தொழிலையும் செய்வேன், வேறு பல தொழில்களையும் தொடங்குவேன் என்று அண்ணாமலை பேட்டியளித்தார்.
இந்நிலையில், அவர் தலைவர் பதவியில் இருந்தபோது வீடு வாடகை மற்றும் செலவுக்கு நண்பர்கள் தான் பணம் தருகிறார்கள் என்று கூறிவந்தார். ஆனால், தலைவர் பதவி போன பிறகு கோடிக்கணக்கான முதலீட்டில் தொழில் தொடங்க பணம் எப்படி வந்தது என்று பாஜ நிர்வாகிகளே மேலிடத்தில் புகார் கொடுத்துள்ளனர். குறிப்பாக, அண்ணாமலை மீது ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடிக்கு ரகசிய ரிப்போர்ட் அனுப்பி உள்ளார். மற்ற கட்சி தலைவர்கள் மீதெல்லாம் ஊழல் புகார் கூறி வந்த அண்ணாமலை இப்போது தன் மீதே ஊழல் குற்றச்சாட்டு வந்துள்ளதே, இதுபற்றி மேலிடம் ஈடி, ஐடி மூலம் விசாரணைக்கு உத்தரவிடுமோ என்ற பயத்தில் உள்ளார்.
பாஜவில் அவருக்கு எந்த பதவியும் கொடுக்காததோடு, தமிழக தேர்தலிலும் அவருக்கு பொறுப்பு தராமல் அதே நேரத்தில் தேர்தல் நடக்க உள்ள கேரளா அல்லது மற்ற மாநிலத்துக்கு பொறுப்பாளராக நியமித்து விரட்டவும் பாஜ மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதெல்லாம் தெரிந்த அவர் அதிமுக-பாஜ கூட்டணிக்கு எதிராக திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் தன்னை பாஜவில் இருந்து நீக்கிவிட்டால் நல்லது என்று அவர் ஆவலாக எதிர்பார்த்து இருக்கிறார்.
அப்படி கட்சியில் இருந்து நீக்கிவிட்டால் தனது ஆதரவாளர்களை இணைத்து புதிய கட்சியை தொடங்கி, டிடிவி, ஓபிஎஸ், சசிகலா ஆகியோருடன் சேர்ந்து விஜய் கட்சியில் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் டிசம்பர் 15ம் தேதிக்குள் ஒருங்கிணைப்பு விவகாரத்தில் நல்ல முடிவு வராவிட்டால் தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதேபோல டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் கட்சி தொடங்க அண்ணாமலையும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதே சமயம் தனிக்கட்சி தொடங்கி, விஜய் கட்சியுடன் கூட்டு சேர்ந்தாலும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா போன்றோருடன் ஒத்துப்போகுமா? தனது அரசியல் எதிர்காலம் என்ன ஆகுமோ, நட்டாற்றில் தவிக்கவேண்டிய நிலை வருமோ என்றும் அண்ணாமலை கவலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
செங்கோட்டையன் தவெகவுக்கு சென்றதற்கு அண்ணாமலைதான் காரணம்
அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘பிரிந்தவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை எடப்பாடி பழனிசாமி சேர்த்துகொள்ளும் வாய்ப்பே இல்லை என தெரிந்து கொண்ட செங்கோட்டையன் வேறுவழி இல்லாமல் விஜய் கட்சியில் சேர்ந்துவிட்டார். இதற்கு அண்ணாமலை தான் முக்கிய காரணம். இதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி அசர மாட்டார்,’’ என்றனர்.

