Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வாழையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து விவசாயிகள் பயன்பெற வேண்டும்

*கருத்தரங்கில் கலெக்டர் அறிவுறுத்தல்

நாகர்கோவில் : வாழை விவசாயிகளுக்கான வாழையில் மதிப்பு கூட்டுதல், பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி திறனை மேம்படுத்துதலுக்கான பயிலரங்கம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அழகுமீனா தலைமை வகித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வாழைப்பயிர் தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து ஆறாயிரம் ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரத்து 858 ஹெக்டர் அளவில் பயிரிடப்படும் மிக முக்கிய தோட்டக்கலை பயிராகும். தக்கலை, கிள்ளியூர், குருந்தன்கோடு வட்டாரங்களில் மிக அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.

அதிக அளவில் வைட்டமின் சி மற்றும் தாதுப்பொருட்கள் கொண்ட பழமாகும். இந்தியா உலக அளவில் அதிக அளவு வாழை உற்பத்தி செய்யும் நாடாகும். அனைவருக்கும் மலிவாகவும் எளிதில் கிடைக்கக் கூடியதுமான பழமாகும்.

வாழையின் அனைத்து பாகங்களும் உபயோகப்படுத்தப்படுகின்றன. இது காகித அட்டை, திசு பேப்பர் போன்றவை தயாரிக்க பயன்படுகிறது. சிப்ஸ், பழச்சாறு, மாவுப்பொருள், ஜாம் போன்றவை தயாரிக்கப்படுகிறது. நவீன யுகத்தில் வாழைப் பழங்களைக் கொண்டு உலர்வாழை மிட்டாய், சாக்லேட், ஜெல்லி போன்றவைகளும் தயாரிக்கப்படுகிறது. வாழையில் இழை மற்றும் நாரை பயன்படுத்தலாம்.

சமையலுக்கு பூ, தண்டு மற்றும் காய்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. கேரளாவின் ஓணம் மற்றும் தமிழ்நாட்டின் பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடை செய்யும் வண்ணம் பயிரிடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் கதலி, செங்கதலி, மட்டி, செம்மட்டி, நேந்திரன், செவ்வாழை, கற்பூரவள்ளி போன்ற பல்வேறு வகையான ரகங்கள் பயிரிடப்பட்டு வருகிறது. வாழை சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகளின் பொருளாதாரம் உயருகிறது.

வாழை சிப்ஸ், பார்லி, ஜாம், ஒயின், பழச்சாறு, புளிக்காடி மற்றும் வாழைப்பாகு ஜெல்லி தயாரிக்கவும் பயன்படுகிறது. வாழை நாரானது பல வண்ணங்களில் அழகு வாய்ந்த கைவினைப் பொருட்களான கைக்குட்டை, பை, கட்டித் தொங்கவிடக்கூடிய பை, சாப்பாட்டு தட்டு வைக்கக்கூடிய பாய் மற்றும் பலவகையான பொம்மைகள் போன்றவை செய்யப் பயன்படுகிறது.

வாழைக் கழிவுகள், கோப்பு மற்றும் நல்ல தரம் வாய்ந்த காகிதங்கள் தயாரிக்க பயன்படுகிறது. வாழை விவசாயிகள் பல்வேறு வகையான மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் பட்சத்தில் ஏற்றுமதி மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான வாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜென்கின் பிரபாகர், தோட்டக்கலை துணை இயக்குநர் நக்கீரன் உட்பட வேளாண்மை, ேதாட்டக்கலைத்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

புவிசார் குறியீடு

2023ம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்ற மட்டி வாழை இம்மாவட்டத்தில் பயிரிடப்படுகிறது. வாழை சாகுபடியில் இங்குள்ள விவசாயிகள் தேசிய அளவில் விருது பெற்றுள்ளனர். சுய உதவி குழுக்கள் மூலம் வாழை நுண்ணூட்ட சத்துகள் அடங்கிய ‘வாழை சக்தி’ தயாரிப்பது பற்றி இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் பெங்களூரில் சிறப்பு பயிற்சி பெற்று சுய தொழில் செய்து வருகின்றனர்.