திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் குப்பநத்தம் அணை அருகாமையில் உள்ள பகுதிகளில் வாழை விவசாயம் கொடி கட்டி பறக்கிறது. இந்தப் பகுதிகளில் ஒன்றான துரிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த விநாயகம் என்பவர் கற்பூரவல்லி சாகுபடியில் நீண்ட கால அனுபவம் கொண்டவராக விளங்குகிறார். அவரைச் சந்தித்து வாழை சாகுபடி அனுபவம் குறித்து கேட்டோம். ``செங்கம் குப்பநத்தம், கொட்டாவூர், கிளையூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வாழை சாகுபடி நடக்கிறது. பூ வாழை, கற்பூர வாழை, ஏலக்கி, ரஸ்தாலி, செவ்வாழை, பச்சை வாழை, புள்ளி வாழை என பல ரகங்களும் இங்கு செழித்து வளர்கின்றன. இதில் எப்போதும் நல்ல விளைச்சல், எளிதான விற்பனை ஆகிய காரணங்களால் நான் கற்பூர வாழையைப் பயிரிடுகிறேன்’’ என பேசத்தொடங்கிய விநாயகம், கற்பூரவல்லி சாகுபடி விவரங்களை அடுக்கினார்.
எங்கள் பகுதியிலேயே வாழை விவசாயம் தொடர்ந்து நடப்பதால் நடவுக்குத் தேவையான கன்றுகளை உள்ளூரிலேயே வாங்கிவிடுவேன். ஒரு கன்று ரூ.5 என்ற விலையில் கிடைக்கிறது. அவ்வாறு வாங்கிய கன்றுகளை நடவு செய்வதற்கு முன்பாக நிலத்தை நன்றாக உழுது சமன்படுத்துவோம். பின்பு அதில் தண்ணீர் பாய்ச்சி 10 நாட்கள் வரை அப்படியே விடுவோம். அப்போதுதான் கன்று நடவுக்கு குழி எடுக்க சுலபமாக இருக்கும்.நடவுக்குழிகளை ஒன்றுக்கு ஒன்று என்ற அளவில் எடுக்க வேண்டும். அதில் வாழைக்கன்றுகளை நட்டு வைத்த பின்னர், வாரத்திற்கு ஒருமுறை கிணற்று நீரை பாய்ச்சுவோம். 3 நாட்களுக்கு ஒருமுறை சொட்டு நீர் பாய்ச்சுவேன். இதையடுத்து 45வது நாள், 90வது நாள், 120வது நாள் என டிஏபி, பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட் உரங்களை இடுவோம். 7வது மாதத்தில் வாழை மரம் வளர்ந்த பின்னர், இலைகளை அறுவடை செய்து விற்பனை செய்யலாம். இலைகளை அப்படியே விட்டால் காற்றடிக்கும் சமயங்களில் மரம் சாய்ந்துவிடும். எனவே, இலைகளை அறுவடை செய்து பராமரிக்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 800 கன்றுகள் வரை நடலாம். ஒரு கன்று நடுவதற்கு, கன்றினுடைய விலை, குழி தோண்டுவது, நடுவது என ரூ.25 வரை செலவாகிறது. அதேபோல் உரம், யூரியா, மருந்து என நடவு முதல் அறுவடை வரையிலான காலம் வரை ஒரு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவாகிறது. நாம் ஏக்கருக்கு 800 செடிகளை வைத்த நிலையில், ஏறக்குறைய 700 தார்களை அறுவடை செய்ய முடியும். ஒரு தாரினுடைய விலை குறைந்தபட்சமாக ரூ.300லிருந்து அதிகபட்ச விலையாக ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் தற்போது கற்பூரவல்லியைப் பொறுத்தவரை கிலோ கணக்கில் எடை போட்டு விற்பனை செய்வதும் உண்டு. கிலோவிற்கு ரூ.18 முதல் ரூ.30 வரை விலை கிடைக்கிறது. குறிப்பாக அறுவடை செய்யப்படும் கற்பூர வாழைகளை சென்னை, பெங்களூரு போன்ற பகுதிகளில் இருந்து வரும் மொத்த வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்று விற்பனை செய்கிறார்கள். வியாபாரிகளே நேரில் வந்து வாழைத்தார்களை கொள்முதல் செய்வதால் எங்களுக்கு அலைச்சல் மிச்சமாகிறது. அதைவிட தாருக்கு உண்டான பணமும் உடனடியாக கிடைக்கிறது.
ஆடி மாதம் முதல் சித்திரை மாதம் வரை கற்பூரவல்லி வாழையின் விற்பனை சிறப்பாக இருக்கும். இந்த சமயத்தில் தார் வருவது போல் திட்டமிட்டு சாகுபடி செய்தால் நல்லது. இந்த கற்பூரவல்லி வாழை சாகுபடிக்கு அதிகப்படியான வேலையாட்கள் தேவையில்லை. குறித்த காலத்தில் தண்ணீர் பாய்ச்சினால் போதும். எப்பொழுதும் மார்க்கெட்டில் கிடைக்கக்கூடிய பழம் என்பதால் அனைத்து தரப்பினரும் கற்பூரவாழையை விரும்பி வாங்கி செல்வார்கள். இதுமட்டுமின்றி கற்பூர வாழை மரத்திலிருந்து இலையை விற்பனைக்கு கொண்டு சென்றால், ஒரு இலை ரூ.3 முதல் ரூ.5 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வாழைத்தார்களை அறுவடை செய்தபிறகு, மரங்களில் இருந்து நாரைப் பிரித்தெடுத்து பூ தொடுக்கவும், கைவினைப் பொருட்கள் செய்யவும், இன்னபிற தேவைகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். இந்தக் காரணங்களால் எங்கள் பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் வாழை பயிரிடுவதில் குறிப்பாக கற்பூர வாழையைப் பயிரிட அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஒரு ஏக்கருக்கு செலவு ரூ.80 ஆயிரம் போக, ரூ.2 லட்சம் வரை லாபம் பார்க்கிறார்கள். இதுதான் செங்கம் தாலுகாவில் நெல்லுக்கடுத்தபடியாக வாழை விவசாயம் கொடிகட்டி பறக்க முக்கிய காரணம்’’ என மகிழ்ச்சியுடன் கூறி முடித்தார்.
தொடர்புக்கு:
ப.விநாயகம்: 90476 85337.